×

வேலூர் மாவட்டத்தில் தங்கு தடையின்றி மீண்டும் களைக்கட்டுது பிளாஸ்டிக் விற்பனை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மீண்டும் களைக்கட்டும் பிளாஸ்டிக் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதிகாரிகள் பெயரளவில் ஆய்வு நடத்தி பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி தடை விதித்தது.

பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களின் உறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்தி, இயற்கை வளத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
50 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பேப்பர், மேசை விரிப்பு, பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், உறிஞ்சு குழல், கைப்பை, கொடி, தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், வேலூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இப்பொருட்கள் தடையை மீறி விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் அவ்வப்போது ரெய்டு நடத்தி, அபராதம் விதித்தாலும், இந்த விதிமீறலை தடுக்க முடியவில்லை.

வேலூர் மாநகரில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், இறைச்சி கடைகள், பூ மார்க்கெட், உணவு விடுதிகள் சாலையோர கடைகள், ஜவுளிக்கடைகள் என பல்வேறு இடங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்கிறது. தொடர்ச்சியாக நடந்து வந்த இந்த ரெய்டு, திடீரென மந்த நிலைக்கு போய்விட்டது. மாநகராட்சி அதிகாரிகள் தொடர் ரெய்டு நடத்தாத காரணத்தால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

குறிப்பாக ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்து குடோன்களில் பதுக்கி வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து பிளாஸ்டிக் விற்பனை அனைத்து பகுதிகளிலும் தாராளமாக நடக்கிறது.

அபராதம் விதிப்பது ஒரு புறம் இருந்தாலும், இன்னொருபுறம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தாத காரணத்தால், இந்த விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

இது குறித்து வேலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உணவு விடுதிக்கு வருவோர் பார்சல் உணவு கேட்கும்போது, பிளாஸ்டிக் கவர்கள் இல்லாத காரணத்தினாலும், மாற்றுப்பொருட்களின் விலை அதிகம் என்ற காரணத்தினாலும் பிளாஸ்டிக் பொருள் விற்பனை மீண்டும் தொடர்கிறது. உணவு விடுதிகளில் வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஓட்டல் உரிமையாளர்களே இந்த விதிமீறலில் ஈடுபடுகின்றனர். அத்துடன், சில ஜவுளிக்கடைகள், பூக்கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு புழக்கத்தில் உள்ளன.

அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை அரசு மானிய விலையில் வழங்கவேண்டும். வியாபாரிகள் ஒத்துழைப்பு தந்தாலும் மக்கள் மீண்டும் பழைய நடைமுறைக்கே வந்து விடுகின்றனர். தற்போது வியாபாரிகள் 50 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் கவர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் 30 குழுக்களாக பிரிந்து பிளாஸ்டிக் ஒழிப்பு ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு கண்காணிக்கப்படுகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்களும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இக்குற்றச்செயல் தொடரக்கூடாது என்பதால் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன், மாற்றுப்பொருளாக துணிப்பை, சணல் பை, பேப்பர் பை, வாழை, தேக்கு, தாமரை, மந்தாரை, அரச இலை தட்டு, பாக்குமட்டை தட்டு, சுட்ட களிமண் தட்டு, கிண்ணம், குவளை, துருப்பிடிக்காத எவர்சில்வர் பாத்திரம் ஆகியவற்றை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அன்றாடம் குப்பை அகற்றச்செல்லும் மாநகராட்சி சுகாதார ஊழியர்களிடம் வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம். மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வ அமைப்பினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Vellore district , Sale of plastic
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...