×

கடும் விதிமுறைகளால் ஆர்வம் காட்டாத பக்தர்களால் களையிழந்தது சபரிமலை சீசன்

சேலம்: சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சீசன் களையிழந்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள், டிராவல்ஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக சபரிமலைக்கு செல்ல ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு செல்லும்போது 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நெகட்டிவ் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால் சபரிமலைக்கு அருகேயுள்ள நிலக்கல்லில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.600 முதல் ரூ.700 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரை மணிநேரத்தில் கொரோனா சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்படி ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளதால், நடப்பாண்டு 5 சதவீதம் பேர் கூட மாலை அணியவில்லை. தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்த பக்தர்கள் கூட நடப்பாண்டு சபரிமலைக்கு செல்லவில்லை.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது குறைந்ததால் இருமுடி பை, துளசிமணி மாலை, ஸ்படிக மணி மாலை, ஐயப்பன் டாலர், இதைதவிர பூஜைப்பொருட்களின் விற்பனையும் கடுமையாக சரிந்துள்ளது. அதேபோல் இருமுடி பைகளில் நிரப்பப்படும் முந்திரி, ஏலக்காய், பேரீச்சை பழம், பெரிய பொரி, திராட்சை, கற்கண்டு, நெய் உள்ளிட்டகளின் விற்பனையும் கடந்தாண்டைவிட நடப்பாண்டு 90 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் கடைவீதியை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனின்போது ஒரு மாதத்திற்கு முன்பே வெளியூர்களில் இருந்து துளசிமணி மாலை, ஸ்படிகமணி, ஐயப்பன் டாலர் மற்றும் இருமுடிக்கு தேவையான மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி உள்ளிட்டவைகளை வாங்கி இருப்பில் வைப்போம். கார்த்திகை, மார்கழி, தை மாதம் மகரவிளக்கு வரை விற்பனை நல்ல முறையில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பல லட்சம் மதிப்பிலான துளசிமணிமாலை உள்பட பூஜைபொருட்கள் விற்பனை நடக்கும்.

நடப்பாண்டு சபரிமலை செல்ல ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பல ஆண்டாக தொடர்ச்சியாக மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள் கூட நடப்பாண்டு சபரிமலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் வியாபாரம் இல்லாமல் போனது. சபரிமலை சீசனும் கைவிட்டதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வியாபாரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிராவல்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1ம் தேதி தொடங்குவதற்கு முன்பே ஐப்பசி 15ம் ேததிக்கு மேல் வேன், பஸ் கேட்டு பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள். கார்த்திகை 1ம் தேதி தொடங்கும் சீசன் தை 1ம் மகரபூஜை வரை புக்கிங் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நடப்பாண்டு சபரிமலை சீசன் தொடங்கியும் புக்கிங் நடக்கவில்லை.சேலம் மாவட்டத்தை பொருத்தமட்டில் 800 டிராவல்ஸ் வேனும்,200 பஸ்சும் உள்ளது. இந்த சீசனில் 5 சதவீதம் கூட புக்கிங் நடைபெறவில்லை.இனிவரும் காலங்களில் கூட எதிர்பார்த்த அளவில் புக்கிங் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.புக்கிங் இல்லாததால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

கோ-ஆப்டெக்சில் 95% விற்பனை குறைவு

சேலம் கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு சபரிமலை சீசன் நேரத்தில் பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது. கடந்தாண்டே இருமுடி, துளசிமணி மாலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை சரிந்தது. நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மாலை அணிவது குறைந்துள்ளது. இதன் காரணமாக கோ-ஆப் டெக்ஸ், காதி வஸ்திராலயம், காதி கிராப்ட், பூம்புகார் விற்பனை நிலையம்,காதிபவன் உள்ளிட்ட அரசு சார்ந்த விற்பனை கடைகளில் 95 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது,’’என்றார்.

தரிசிக்க முடியாதது வேதனையாக உள்ளது

ஐயப்ப பக்தர் பெருமாள் கூறுகையில், ‘‘கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக சபரிமலைக்கு மாலை அணிந்து கோயிலுக்கு செல்வேன். நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக அங்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 10 வயதுக்கு குறைந்தவர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக நடப்பாண்டு மாலை அணிந்து விரதத்தை தொடங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பன் தரிசனம் செய்தால், அந்தாண்டு முழுவதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.நடப்பாண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாததால் வருத்தமாக உள்ளது,’’ என்றார்.

Tags : season ,Sabarimala ,devotees , Sabarimala
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு