×

புரெவி புயலால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு..!!

காரைக்கால்: புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. காரைக்கால், புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படும் நிலையில் தற்போது காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இன்று விடியற்காலை அதிதீவிர கனமழை பெய்து வந்ததன் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் தர்மா உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். காரைக்காலில் விடாது பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமிட்டு பாதிப்பு ஏற்படும் பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களின் கடைமடை பகுதியாக காரைக்கால் இருக்கிறது. அதனால் அப்பகுதியில் பெய்யும் கனமழையானது காரைக்கால் வழியே சென்று கடலில் கலக்கின்றது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. தற்போது அப்பகுதியில் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆறுகளை கண்காணித்து வருகின்றனர். கனமழை காரணமாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களுக்கும், மீன்வளத்துறை இணை இயக்குநர் அறிவிப்பு கடிதம் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : storm ,holidays ,Karaikal ,schools , Purevi, heavy rain, Karaikal, school, holidays
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...