கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் விரைவில் நியமனம்: மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் விரைவில் நடைபெறும் என மாநில தலைவர் டிகே சிவகுமார் கூறினார். காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 17 பேர் பாஜவில் இணைந்த நிலையில் 15 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. தினேஷ்குண்டுராவ் தலைமையில்  காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலை சந்தித்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ்குண்டுராவ் ராஜினாமா செய்த நிலையில் கடந்த 2019 ஜூன் மாதம் 19ம் தேதி அக்கட்சி  நிர்வாகிகள் அனைவரின் பதவிகள் பறிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மேலிட தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தினேஷ்குண்டுராவ் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.

அது போல் செயல் தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே செயல்பட்டார். இந்த சூழ்நிலையில் தினேஷ்குண்டுராவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. அதே நேரம் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி டிகே சிவகுமாருக்கு அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பதவியேற்பு விழா தள்ளிக்கொண்டே போனாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக  பதவியேற்றார். இதையொட்டி நடந்த விழாவில் செயல் தலைவர்களாக ஈஸ்வர் கண்ட்ரே, சலீம் அகமது மற்றும் சதீஷ் ஜாரகிஹோளி ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதுவரை மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை என்பதால் இடைத்தேர்தலில் தொண்டர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்திற்கான அடிப்படை பணியை துரிதப்படுத்தினர். காணொலி காட்சியின் மூலமாக விவாதம் நடத்திய டிகே சிவகுமார் 115 பேர் கொண்ட நிர்வாகிகள் பட்டியலையும் தயாரித்துள்ளார்.

இந்த 115 பேரில் 30 பேர் பொது செயலாளர்கள், 15 முதல் 20 பேருக்கு துணை தலைவர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அளிக்கப்படும் என தெரிகிறது. புதிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவியாக இருப்பர் என்பதை புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் தீர்மானிக்கும். மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகேசிவகுமார், ஆட்சியை பிடிக்கவேண்டும் என விரும்புகிறார். மாநில காங்கிரஸ் கட்சி தலைவரின் விருப்பத்தை புதிய நிர்வாகிகள் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதுகுறித்து  காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் தரப்பில் விசாரித்த போது, புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கட்சிக்கு உழைத்த நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கட்சிக்காக உழைத்த நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Related Stories:

>