கடுமை பிரிவு அருகில் காற்று தரம் குறியீடு

புதுடெல்லி: காஜியாபாத்திலும், கிரேட்டர் நொய்டாவிலும் காற்று மாசு கடுமையாக உள்ள நிலையில், டெல்லியிலும் காற்று தரம் குறியீடு (ஏக்யூஐ) மிக மோசம் பிரிவின் அபாய விளிம்புக்கு மாறி, கடுமை பிரிவை எட்டத் தொடங்கி உள்ளது. நேற்று காலை 9.00 மணிக்கு பதிவான புள்ளிவிவரப்படி ஏக்யூஐ 381 என இருந்தது. 401ஐ எட்டினால் கடுமை பிரிவுக்கு ஏக்யூஐ மாறும் என்பது கவனிக்கத்தக்கது. புதனன்று 24 மணி நேர சராசரியாக ஏக்யூஐ 367 என்றிருந்தது. ஞாயிறன்று மோசம் பிரிவில் ஏக்யூஐ நீடித்தது குறிப்பிடத்தக்கது. காஜியாபாத், நொய்டா நகரங்களில் ஏக்யூஐ 430, 410 என பதிவாகி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேகமூட்டம் இல்லாத வானத்தில், காற்றின் வேகம் மணிக்கு 12 கி.மீ என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 27 டிகிரி செல்சியஸ்’’, என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேகம் காணப்பட்டால் பூமியிலிருந்து மேலெழும்பும் அனல் காற்று அதில் மோதி மீண்டும் பூமியில் வெப்பம் ஏற்படுத்தி இருக்கும்.

மேகம் இல்லாததால் குளிர் அதிகரித்து உள்ளது. மேலும் இமயமலை மேற்குப்பகுதியில் இருந்து வீசும் பனிக்காற்றின் தாக்கமும் டெல்லியில் குளிர் அதிகரிக்கக் காரணம் எனவும் அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், அசாதாரண வானிலை மாற்றங்கள் காரணமாக, ஏக்யூஐ மிக மோசம் அல்லது கடுமை பிரிவில் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என மத்திய புவி அறிவியல் துறையின் காற்று தரம் கண்காணிப்பு கமிட்டி சபர் கூறியுள்ளது. அது மட்டுமன்றி பயிர்க்கழிவு எரிப்புகள் மிகவும் குறைந்து உள்ளதாகவும், அதை முன்னிட்டு பிஎம்2.5 அளவீடு காற்றில் 4 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும் சபர் தெரிவித்து உள்ளது.

Related Stories:

>