×

உச்சகட்டத்தில் விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைகளுக்கு சீல் வைப்பு; போலீஸ், துணை ராணுவம் குவிப்பு: சாலையில் கான்கிரீட், இரும்பு தடுப்பு அமைப்பால் கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் திண்டாட்டம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களை தலைநகருடன் இணைக்கும் அனைத்து எல்லைகளையும் போலீசார் சீல் வைத்தனர். திருத்தம் செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை வாபஸ் பெற விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து மத்திய அரசு சிங்கு, திக்ரி எல்லையை மூடும்படி டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. இதனிடையே, நொய்டா, காஜிப்பூர் எல்லையை அடைந்து டெல்லிக்குள்  நுழைய முயற்சித்தனர். அங்கும் அவர்களை டெல்லி, உத்தரப்பிரதேச மாநில போலீசார் தடுத்தனர். அதையடுத்து காஜிப்பூர் டெல்லி எல்லை அடைக்கப்பட்டது. மேலும் நொய்டா எல்லையான சில்லாவும் நேற்று மூடப்பட்டது.

எல்லையை  போலீசார் சீல் வைத்ததாலும், சாலைகளை விவசாயிகள் ஆக்ரமித்து அமைதியான  முறையில் போராடி வருவதாலும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அணி அணியாக விவசாயிகள் திரண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் எந்த திசையில் பார்த்தாலும் மைல் கணக்கில் விவசாயிகள்  கடலாக பெருகி இருப்பது காண முடிகிறது. காஜிப்பூர் எல்லையில் திரண்ட விவசாயிகள் ஆவேச கோஷங்கள் எழுப்பி சாலையில் தர்ணாவில் ஈடுபட்டதால் நேற்று பரபரப்பு தொற்றியது. எனவே அங்கு மட்டும் ஆயிரக்கணக்கில் போலீஸ் மற்றும் துணை ராணுவம் அனுப்பப்பட்டது. தலைநகருக்கு பல்வேறு பணிகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய பொது மக்கள், எல்லை மூடல் நடவடிக்கையால்  கடும் அவதி அடைந்தனர்.

சிங்கு, திக்ரி, சில்லா, குருகிராம், ஜஜ்ஜார்-பகதூர்கர் என 5 எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு உள்ளதால், அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு பணி நிமித்தம் செல்ல வேண்டிய பலரும், அது போல டெல்லியில் இருந்து அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டியவர்களும் அல்லல் அடைந்தனர். அது மட்டுமன்றி சரக்கு வாகனங்களும் சாலையில் இரு புறமும் ரயில் பெட்டி கணக்கில் வரிசை கட்டி இருப்பதால், வாகன போக்குவரத்தும் மிகவும் மந்தமாக காணப்பட்டது. திக்ரி, ஜரோதா, ஜதிக்கரா பகுதிகள் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளதாக டிவிட்டர் வலைதளத்தில் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை  விடுத்திருந்தனர்.

அதைப் போல், பதுசராய் எல்லையில் இரு சக்கர வாகனங்கள்  மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அரியானா செல்ல விரும்புபவர்கள் தன்சா, தவ்ரலா,  கபஷெரா, ராஜ்கோரி தேசிய நெடுஞ்சாலை 8, பிஜ்வாசன், பஜ்கெரா, பாலம் விகார்  அல்லது துந்தஹெரா பகுதிகளை வாகனங்கள் தேர்வு செய்து அரியானா செல்லலாம்  எனவும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். அதன் காரணமாக மேற்படி பகுதிகளில்  வாகனங்கள் அதிகரித்து, முந்திச் செல்ல முயன்று, இறுதியில் பெரும் குழப்பமாக  போக்குவரத்து சிக்கல் அங்கும் நீடித்தது.

விவசாயிகளின் பலம்  கடந்த 7 நாட்களில் பல மடங்கு அதிகரித்து உள்ளதால், எல்லைகளில் படை படையாக போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் எல்லைகளையும் போலீசார் தீவிரமாக பலப்படுத்தி  உள்ளனர். கான்கிரீட் தடை, பல அடுக்கு இரும்பு தடுப்பு அரண், டிராக்டர்களில் மணல் மூட்டைகளை நிரப்பி சாலையின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் யாரும் டெல்லி எல்லைக்குள் கால் பதிக்காமல் போலீசாரும், துணை ராணுவத்தினரும் கண்காணித்து வருகின்றனர். அதுபோல, டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களின் காவல்துறை உயரதிகாரிகள், எல்லை பகுதியில் முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 7 வது நாளான செவ்வாயன்று அரியானாவின் குருகிராம் மற்றும் ஜஜ்ஜார்-பஹதூர்கர் பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் சாலையில் டெல்லி எல்லைகளை போலீசார் சீல்  வைத்தனர்.

எல்லைகளை மூடியதால் ஏற்பட்டு உள்ள நெருக்கடி
• கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் விவசாயிகள் முகாமிட்டு உள்ளதால், கழிப்பிட பிரச்னை பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது. அதனால் சுகாதார சீர்கேடு உருவாகும் என கவலை எழுந்துள்ளது.
• அத்தியாவசிய பொருட்கள் வரத்து இல்லாததால் டெல்லியில் காய்கறி, பழங்கள் விலை தாறுமாறாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
• இது தான் சாக்கு எனக் கருதி அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
• சரக்கு லாரிகள் எல்லைகளை ஒட்டி கி.மீ கணக்கில் அணி வகுப்பதால், சரக்குகள் உரிய நேரத்தில் வந்து சேராமல், தொழில் முடக்க நிலை உருவாகி உள்ளது.
• தயாரான சரக்குகளை சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் பெரும் நஷ்டம் சந்திக்க நேரிடும் என உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
• சரக்குகள் அழுகினால், ஒட்டு மொத்த நஷ்டத்தை நம் தலையில் கட்டி விடுவார்களோ எனும் அச்சம் டிரைவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
• ஒரு வாரமாக வாகன ஓட்டம் இல்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு எல்லை மூடியிருக்கும் என தெரியாத நிலையில், வாகனக் கடன் தவணையை எப்படி செலுத்துவது என புரியாமல் லாரி உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : struggle ,Peasants ,borders ,road ,Delhi , The peasant struggle at its peak Sealing of Delhi borders; Police, paramilitary mobilization: Concrete, iron barricades block vehicles on the road
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...