ஆர்டி-பிசிஆர் கட்டண குறைப்பு தனியார் ஆய்வகங்கள் வரவேற்பு

புதுடெல்லி: மக்கள் மத்தியில் பீதி அதிகரித்து உள்ள நிலையில், கொரோனா மாதிரிக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணத்தை ரூ.800 ஆக குறைத்து அறிவித்த ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என தனியார் லேப்புகள் பாராட்டி உள்ளன. அரசு மருத்துவமனைகளிலும், அரசு சார்ந்த முகாம்களிலும் கொரோனா மாதிரி ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் லேப்களில் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு ரூ.2,400 வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அங்கீகரித்து உள்ளது.

அதே சமயம் ஏஜி கிட் சோதனைக்கு கட்டணம் ரூ.500 மட்டும் வசூல் செய்யப்படுகிறது. ஆய்வக ஊழியர்களை கொண்டு ஏஜி கிட் சோதனையை வீடுகளிலேயே செய்து கொள்ள முடியும். அந்தளவுக்கு எளிதானது. ஆனால் நெகட்டிவ் முடிவு மட்டும் அதில் உறுதியாக தெரியும். ஏஜி கிட் சோதனையில் பாசிட்டிவ் தீர்மானிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, மாதிரி அளித்து, அதில் நெகட்டிவ் முடிவு கிடைக்காத நபர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்டி-பிசிஆர் சோதனையில் முடிவு தெரிய 5 மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும். மேலும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கை மாதிரி சோதனை செய்தால், முடிவுகள் தெரிந்து கொள்ள பல நாட்களும் ஆகும். ஏஜி கிட்டில் அரை மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.

ஆர்டி-பிசிஆர் சோதனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அங்கீகரித்து உள்ளது. எனினும், ரூ.2,400 கட்டணம் என்பதால் பலரும் அந்த சோதனையை விரும்பவில்லை. தற்போது கொரோனா 3ம் அலை தற்கெட்டு வீசுவதால், அனைவரும் ஏற்கும் வகையில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணத்தை குறைக்க ஆம் ஆத்மி அரசு தீர்மானித்தது. அதையடுத்து ரூ.2,400 க்கு பதில் தனியார் லேப்களில் ரூ.800 மட்டும் வசூலிக்க வேண்டும் என திங்களன்று அறிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த உத்தரவு உடனடியாக அமலாகிறது என்றும், அதற்கான ஒப்புதல் ஆளுநரிடம் இருந்து கிடைத்துள்ளதாகவும் கூறினார். வீட்டுக்கு ஆள் அனுப்பி மாதிரி சேகரிக்க வேண்டும் என்றால் ரூ.1,200 வசூலிக்கலாம் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கட்டண குறைப்பு எனும் ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கை வரவேற்கத் தக்கது என தைரோகேர் லேப் நெட்வொர்க் துணை தலைவர் சீசர் சென்குப்தா பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மூன்றாம் அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் இந்த வேளையில் இந்த அறிவிப்பால் கோல்டு ஸ்டாண்டர்டு ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு மக்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள். மேலும் ஒரு அலை இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த அறிவிப்பால் மக்கள் தாங்களாக சோதனை செய்து கொள்ள முன் வருவார்கள்’’, எனக் கூறினார். இதே கருத்தை டாக்டர் லால் பாத்லேப்ஸ் உள்பட பல்வேறு தனியார் லேப்களும் தெரிவித்து உள்ளன. அதே சமயம் ஒரு சில தனியார் லேப்கள் கருத்து தெரிவிக்க மறுப்பும் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு ரூ.2,400 க்கு பதில் தனியார் லேப்களில் ரூ.800 மட்டும் வசூலிக்க வேண்டும். வீட்டுக்கு ஆள் அனுப்பி மாதிரி சேகரிக்க வேண்டும் என்றால் ரூ.1,200 வசூலிக்கலாம்.

Related Stories: