×

கர்நாடகாவில் பரபரப்பு: சிறையில் இறைச்சி, மதுபானம் முன்னாள் அமைச்சர் ஜாலி

பெங்களூரு: தார்வார்டு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினய் குல்கர்னிக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கர்நாடகத்தில் உள்ள  சிறைகளில் கைதிகளுக்கு அவர்கள் கொடுக்கும் லஞ்சத்திற்கு ஏற்ப சலுகைகள் மற்றும் சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதாக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இவரிடம் சிக்கியது தமிழகத்தை சேர்ந்த  ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான்.இந்நிலையில் பெலகாவி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் வினய்குல்கர்னிக்கு, சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருப்பதாக ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.  தார்வார்டு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட வினய்குல்கர்னிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

அவர் பெலகாவி இன்டலகா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு எடுத்து வந்து வழங்குவது தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால் வினய் குல்கர்னிக்கு அப்படியில்லை. வீட்டில்  இருந்து அவரது மனைவியே உணவை சமைத்து எடுத்து வந்து வினய் குல்கர்னிக்கு வழங்கியுள்ளார். இதற்கான பணியில் சிறை ஊழியர்கள் சிலர் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சை, கை, கால்களை பிடித்து  விடுவதற்கு, தனி ஊழியர்கள், ஏ.சி, வசதி டி.வி மற்றும் வேண்டிய நேரத்திற்கு மதுபானம், இறைச்சிகள் அவருக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் சிறைத்துறை எஸ்.பி  கிருஷ்ணகுமாருக்கு வந்தது. ஆனால் அவர் இவை உண்மை இல்லை என்று பதில் கூறியுள்ளார். இதனால் சிறைத்துறை நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


Tags : Jolly ,Karnataka ,jail , Sensation in Karnataka: Jolly meat in jail, former minister
× RELATED இறுதியாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை