×

தினகரன் செய்தி எதிரொலியாக விசாரணை வெள்ளக்கெவி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர முடியுமா?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  தினகரன் செய்தி எதிரொலியாக தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, வெள்ளக்கெவி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி செய்ய முடியுமா என்பது குறித்து, அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று வழக்கம்போல வழக்குகளை விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘டிச.2ம் தேதி (நேற்று) தினகரன் நாளிதழில் 40 ஆண்டாக மலைக்கிராமத்திற்கு சாலை  வசதி இல்லை என்பது குறித்து படத்துடன் விரிவான செய்தி வந்துள்ளது. அந்த செய்தியில், தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு மேல் வெள்ளக்கெவி மலைக்கிராமத்துக்கு 1980ல் 17 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.97  லட்சம் ஒதுக்கி திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, வவ்வாத்துறை என்னும் இடத்தில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்து, சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் அதன்பின் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் 40 ஆண்டுகளாக மலைக்கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டாலும், மகப்பேறு காலங்களிலும் டோலி கட்டி, அவர்களை தூக்கி வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். நேற்று முன்தினம் ஒரு பெண்ணுக்கு உடல்நிலை  சரியில்லாததால், அவரை டோலி கட்டி 17 கி.மீ தூக்கி வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் என கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த நிலை உள்ளது? எதற்காக பெண்ணை டோலி கட்டி தூக்கி வந்தனர்?’’ என்றனர். அப்போது அரசு  வக்கீல்கள் பத்மாவதிதேவி, முத்துகீதையன் ஆகியோர் ஆஜராகி, “இந்த மலைக்கிராமத்திற்கு சாலை அமைக்க முடிவானது. ஆனால், சாலை அமைக்க முடியாத அளவிற்கு மலைப்பகுதி அடுக்கடுக்காக உள்ளது. யானைப்பாதை அல்லது வேறு  ஏதேனும் வகையில் பாதை அமைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், தினகரன் செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்தனர். பின்னர், ‘‘வெள்ளக்கெவி மலைக்கிராமத்தில் எவ்வளவு மக்கள் வசிக்கின்றனர்? இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி உள்ளதா?  மலைக்கிராமத்திற்கு எப்படி சாலை வசதி செய்ய முடியும்? போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறையினருடன் ஆலோசித்து அரசுத்தரப்பில் பதில் மனுவாக  தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.



Tags : road facility ,hill village ,Vellakevi ,Dinakaran , Can road facility be provided to Vellakevi hill village ?: Icord branch orders government to respond
× RELATED மலைக்கிராமங்களுக்கு குதிரை,...