இடஒதுக்கீடு கோரி பாமகவினர் நேற்று 2ம் நாளாக போராட்டம்: ஜி.கே.மணி உள்பட 500 பேர் கைது

சென்னை: இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஜி.கே.மணி உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் பாமக சார்பில் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 1ம் தேதி சென்னை டிஎன்பிஎஸ்சி எதிரே போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக பாமக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். சுமார் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் ஜி.கே. மணி பேசியதாவது: இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் மாபெரும் போராட்டம் வெடிக்கும். வன்னியர் சமூகம் வளராமல் தமிழகம் முன்னேறியதாக கருத முடியாது. இது சமச்சீர் வளர்ச்சி இல்லை. இந்த போராட்டத்தால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்க கூடாது. பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

Related Stories:

>