சட்டவிதிகளுக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: சட்டத்துக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி சோழிங்கநல்லூரில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கம் வசூலிக்கும் உரிமை 15 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களோ சாலை, பராமரிப்பு செலவுகளை விட பலமடங்கு ஆதாயம் பார்த்து விட்டன. மக்களை சுரண்டுகிற போக்கு ஒருபுறமிருக்க, தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயித்தல் குறித்த மத்திய அரசின் சட்டத்தின்படி, மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கி.மீட்டருக்கு அப்பால் மட்டுமே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி.

ஆனால், எடப்பாடி தலைமையிலான மாநில அரசு, பெருங்குடி, துரைப்பாக்கம் 200 அடி சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் இணைப்பு சாலை மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி மற்றும் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர் சட்ட விதிகளுக்கு எதிராக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என்றனர்.தயாநிதி மாறன் எம்பியும், சட்டத்துக்கு புறம்பாக இயங்கக்கூடிய சுங்கச்சாவடிகள் அகற்றவேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் அளித்துள்ளார். இதற்கு செவிசாய்க்காத தமிழக அரசை கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>