நாடு முழுவதும் ஜன.27க்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையத்தில் வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படுவர்கள் குற்றவாளி என்று உறுதியாகும் முன்னதாகவே மர்மமான முறையில் அங்கேயே இறந்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதுகுறித்து கேள்வியெழுப்பினால் பெயருக்கென்று தான் போலீசார் தரப்பில் பதில் தரப்படுகிறது. உதாரணத்திற்கு தமிழகத்தின் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த தந்தை, மகன் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பியதோடு, அதுகுறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 24ம் தேதி நடந்த விசாரணையின் போது, அனைத்து மாநிலங்கள் தரப்பிலும் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்துவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று தமிழக அரசு தரப்பிலும் அப்போது ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், ‘மாநிலத்தில் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அப்படியென்றால் முக்கியம் இல்லை என நினைக்கும் பகுதிகளில் உள்ள தமிழக காவல் நிலையத்தில் சிசிடிவி பொருத்தப்படுவது கிடையாதா?, அல்லது குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை அடிக்க வசதியாக இருப்பதால் அங்கு கேமராக்கள் பொருத்தப்படவில்லையா?’’ என சரமாரி கேள்விழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ‘தமிழகத்தில் லாக்அப் அறைகள் முதற்கொண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,”காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் அதன் பதிவானது 45 நாட்களுக்கு ஒருமுறை தானாக அழியும்படி அதன் மெக்கானிசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் அட்டூழியங்கள் காவல் நிலையத்தில் நடந்தால் அது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் அனைத்து சம்பவங்களையும் சேமித்து பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். மேலும் அதுகுறித்து உடனடியாக

புகாரளிக்கவும் வேண்டும்’’ என தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவது காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை கடந்த 24ம் தேதி ஒத்திவைத்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பாலி நாரிமண், கே.எம்.ஜோசப் மற்றும் அனிருத்தா போஸ் நேற்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதுகுறித்த துறை சார்ந்த அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும். இதனை வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவு யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்றம் நிச்சயமாக கண்காணிக்கும். வழக்கும் மீண்டும் ஜனவரி 27ம் தேதி பட்டியலிடப்படும் போது அதுகுறித்த அறிக்கையை மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்கெங்கு இருக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

* காவல் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில், லாக்-அப் வெளிப்பகுதி, வராண்டா, வரேற்பறை , காவல் ஆய்வாளர் அறை, துணை ஆய்வாளர் அறை,  காவல்நிலைய சுற்று பகுதி, காவல் நிலைய பின் பகுதி ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும்.

* இரவிலும் தெளிவாக ஒளிப்பதிவு செய்யும் தொழில்நுட்பத்துடன் கேமரா இருக்க வேண்டும். அதன் பதிவானது குறைந்தது 18 மாதங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும். அல்லது ஒரு வருடத்திற்கு குறையாமல் வீடியோ பதிவு பாதுகாக்கப்படும் வகையில் அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட வேண்டும்.

* மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கேமரா இருக்க வேண்டும்.

* காவல் நிலையத்தில் தவறுகளோ அல்லது மனித உரிமை மீறலோ நடக்கும் பட்சத்தில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு சம்பந்தப்பட்ட வீடியோக்களை ஆதாரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

* இந்த உத்தரவுகளை உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் இதனை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தொடர்பாக அனைத்து மாநிலத்தின் முதன்மை செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளர் ஒரு பிரமாணப் பத்திரத்தை 6 வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்..

Related Stories:

>