×

நாளை காலை கரையைக் கடக்கிறது புரெவி புயல் இன்று இரவு குமரிக்கடல் பகுதிக்கு நகரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு குமரிக் கடல் பகுதிக்கு நகரும். பின்னர் நாளை காலை இந்த புயல் பாம்பன்-குமரி இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து வங்கக் கடலில் தற்போது இலங்கை அருகே புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு புெரவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று பாம்பன் பகுதியில் இருந்து தென் கிழக்கே 300 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு- வடகிழக்கே 400 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது நேற்று இரவு மேலும் வலுப்பெற்று பாம்பன் பகுதிக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இதையடுத்து, இன்று இந்த புயல் பாம்பன் வழியாக மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழக கடலோரப்பகுதியை ஒட்டி நகரும். இன்று இரவு மேலும் வலுப்பெற்று கடும் புயலாக மாறும். பின்னர் நாளை அதிகாலையில் பாம்பன்-கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் இன்று காலை முதல்  ராமநாதபுரம் தொடங்கி படிப்படியாக கன்னியாகுமரி வரை அதிகரிக்கும். அப்போது மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து இன்று மதியத்துக்கு பிறகு மணிக்கு 99 கிமீ வேகத்தில் காற்று வீசும். மாலத்தீவு மற்றும் அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

இதன் காரணமாக பாம்பன், தூத்துக்குடி, துறைமுகங்கள், ராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 6 மற்றும் 7 எண் ஏற்றப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் புயல் நிலை கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைப்பு: கடல் சீற்றமாக இருப்பதால் பாம்பன் கரையோரத்தில் பல்வேறு இடங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடிஅரிச்சல்முனை பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டதால் கடற்கரையில் போலீசார் ஓய்வு கட்டிடம் அஸ்திவாரம் சேதமடைந்தது. ராமேஸ்வரம் தீவுப்பகுதி மற்றும் மண்டபத்தில் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ரயில் இயக்கம் நிறுத்தம்: கடல் சீற்றத்தினால் தனுஷ்கோடி துறைமுகபாலம் பகுதியில் குடிசைகளில் இருந்த 141 பேர் தெற்கு கரையூரில் உள்ள சுனாமி பல்நோக்கு நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டனர். பாம்பன் கடலில் நேற்று மணிக்கு 40 கி.மீ வேகம் முதல் 65 கி.மீ வேகம் வரையில் காற்று மாறி மாறி வீசியது. கடல் கொந்தளிப்புடனும் அதிக சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் பாம்பன் வடக்கு கடற்கரை மற்றும் தெற்கு கரை பகுதியில் பல இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில் இயக்கப்படவில்லை.

படகு சேதம்: மண்டபம் காந்தி நகர் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு காற்றின் வேகத்தினால் கடலில் கவிழ்ந்து சேதமடைந்தது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலையில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது.நெல்லை: புயல், வெள்ளத்தை சமாளிக்க நெல்லை மாவட்டத்தில் 188 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோர பகுதிகளில் மீனவர்களை தங்க வைக்க 7 பல்நோக்கு கூடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என சிறப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்தார்.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் புரெவி புயலின் போக்கிற்கேற்ப அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் போலீசார் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள் தொங்க விடப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.டெல்டா மாவட்டம்: டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை பெய்தது. மேலும் நாகை, புதுகையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. நாகை மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைத்திருந்த 3 நாட்டு படகுகள் தண்ணீரில் மூழ்கியது.

குமரியில் 650 மீனவர்கள் மாயம்
தெற்காசிய மீனவர் தோழமை பொதுசெயலாளர் சர்ச்சில் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களில் இதுவரை 60 விசைப்படகுகள் திரும்பவில்லை. அதில் உள்ளவர்கள் தொடர்பில் வரவில்லை என்றார். இந்த 60 விசைப்படகுகளில் சுமார் 650 மீனவர்கள் வரை உள்ளனர். அரபிக்கடலில் புயல் கடந்து செல்லும் நிலையில் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து எதிர்பார்க்கப்படுவதால் பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Hurricane Brevi ,Gulf , Crossing the border tomorrow morning Puree storm tonight Moving to the Gulf: Meteorology Center Info
× RELATED தூத்துக்குடி கடல் எல்லையில்...