×

அதிமுக ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி: கிருஷ்ணகிரி ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: ‘அதிமுக ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு இது தண்ட  ஆட்சி. இந்த டெண்டர் ஆட்சிக்கும், தெண்ட ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம்- 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று பேசியதாவது: பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகளையும் ஒன்றிணைத்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நாமும் போராட்டக்களம் காண இருக்கிறோம். நாளைய தினம் (இன்று) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆலோசித்து விரைவில் போராட்டக்களம் காண்போம். வேளாண்மையை அழிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைப்போம்.சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க புதிய திட்டங்களைப் போடப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக என்ன செய்தது?.

நீர் மேலாண்மைக்கு விருது வாங்கியதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவரது ஆட்சியில்தான் சென்னை தண்ணீரில் மிதந்தது. இதுதான் விருதின் லட்சணமா? நீர் மேலாண்மைத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக சில நாட்களுக்கு முன்னால் சொன்னதும் இவர் தான். இப்போது பணமில்லை என்பதும் இவர்தான். அதாவது வாய்க்கு வந்ததைப் பேசுவதுதான் பழனிசாமியின் வழக்கம்.சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான குவாரி டெண்டர் விடப்பட்டது. 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார். கொரோனா காலத்தில் இ-டெண்டர் விடாமல், நேரடி டெண்டரை விட்டுள்ளார்கள். அவசர அவசரமாக விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த டெண்டரை விட்டுள்ளார்கள். சில ஒப்பந்தக்காரர்கள் ஆதாயம் அடைவதற்காக இதைச் செய்துள்ளார்கள் என்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விதிமுறைகளின்படித் தான் டெண்டர் விட்டோம் என்று அரசு தரப்பு முதலில் சொன்னது. ஆனால் அடுத்த கட்ட விசாரணையில், அந்த டெண்டரை கேன்சல் செய்துவிட்டதாக அரசே சொல்லிவிட்டது. இதேபோன்று தருமபுரி மாவட்ட டெண்டர் முறைகேடு தொடர்பாகத் தாமரைச்செல்வனும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த டெண்டர்கள் குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒவ்வொன்றில் லாபம் பார்ப்பதற்கு மட்டுமே இவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.அதிமுக ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி. இந்த டெண்டர் ஆட்சிக்கும், தெண்ட ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லா நிலத்திலும் பயிரும் இருக்கும், களையும் இருக்கும். ஒரு விவசாயி, அந்தக் களையை முதலில் எடுத்துக் களைவார். அதன்பிறகுதான் பயிர் சரியாக வளரும். அதே போல் தமிழ்நாட்டு அரசியலில் உருவான களைகள்தான் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும்.

இந்தக் களைகளை அகற்றாமல் தமிழ்நாட்டைச் செழிக்க வைக்க முடியாது. இந்தக் களைகளை அகற்றும் தேர்தல்தான் சட்டமன்றத் தேர்தல். தமிழக அரசியல் களத்தில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமி கும்பல் என்ற களையைக் கோட்டையிலிருந்து களையவேண்டும்.இவ்வாறு திமுக தலைவர் உரையாற்றினார்.
கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக என்ன செய்தது?.

Tags : AIADMK , This is a tender rule for AIADMK people To the people of Tamil Nadu This is the rule of thugs: MK Stalin's rage at the Krishnagiri 'Let's save Tamil Nadu' meeting
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...