நாகர்கோவிலில் டவுண் ரயில் நிலைய கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் திட்டம்: இறுதி கட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுண் ரயில் நிலைய கட்டிடத்தை திறந்து அலுவலர்களை நியமிக்க திட்டமிட்டு ரயில்வே மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளது. நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் ரயில்பாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முன்பதிவு வசதி கிடையாது. சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெறமுடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அவர் வந்து பயணச்சீட்டு வழங்குவார். ரயில் புறப்படும்போது பச்சைக்கொடி காட்டும் பணியையும் அவரே கவனித்து வருகிறார்.

ரயில் நிற்காத நேரங்களில் இந்த நிலையம் மூடப்பட்டிருக்கும். குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை இரண்டு ரயில் தண்டவாளங்கள் கொண்ட கிராசிங் ரயில் நிலையமாக மாற்றி விரிவாக்கம் செய்ய தனித்தனியாக இரண்டு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்பட்டது. இந்த காரணத்தால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் பல வருடங்களுக்கு பிறகு ரயில் நிலையத்துக்கு புதிய கட்டிட பணிகள் நிறைவுபெற்று திறப்புவிழாவிற்காக தயார்நிலையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் புதிய கட்டிடத்தை திறந்து நிலைய அதிகாரி நியமிக்க வேண்டும்.

இதேபோல் முன்பதிவில்லாத கணிப்பொறி வசதியுடன் கூடிய பயணசீட்டு கவுண்டரை பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடத்தை திறந்து செயல்படுத்தாமல் மீண்டும் தனியார் பயணசீட்டு முகவரை நியமிக்க ரயில்வேயால் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கிறது. இது ரயில் பயணிகளை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக கடந்த 28ம் தேதி தமிழ்முரசு நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதன் எதிரொலியாக திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்தை திறந்து போதிய அலுவலர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் புதிய கட்டிடம் போதிய அதிகாரிகளுடன் திறந்து செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த கட்டிடத்தில் மீதமிருந்த எலெக்ட்ரிக்கல் சார்ந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. பணியாளர்கள் கட்டிடத்தில் மின் விசிறி, விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகளை தொடங்கி உள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

Related Stories:

>