×

வேலூர் கொணவட்டத்தில் உள்ள சதுப்பேரியின் கரை உடையும் அபாயம்: ‘வீடுகள் மூழ்கும்’ பொதுமக்கள் அச்சம்

வேலூர்: நிவர் புயல் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சதுப்பேரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகரம் உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக சதுப்பேரி விளங்கி வருகிறது. செம்பேடு, சதுப்பேரி, கொணவட்டம், மேல்மொணவூர், கீழ்மொணவூர், கருகம்பத்தூர் உட்பட சுற்றுவட்டார பகுதி மக்களின் விவசாய தேவைகளுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் சதுப்பேரியில் உள்ள தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

621 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து அப்துல்லாபுரம் ஏரி வழியாக நீர்வரத்துக்கால்வாய் உள்ளது. அப்துல்லாபுரத்தில் இருந்து செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் பெரும்பாலான இடங்கள் தனியார் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால் குறுகலாகிவிட்டது. மேலும் இருக்கும் இடத்திலும் முழுவதுமாக முட்செடிகள் முளைத்து, செடி, கொடிகள் படர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. போதுமான நீர்வரத்து இருந்தும் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சதுப்பேரி முழு கொள்ளளவை எட்டுவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கால்வாய் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி சதுப்பேரி அருகே நீர்தேங்கும் பகுதியிலும் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் தோல் கழிவுகள் உள்பட கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாததால் தொடர்ந்து ஏரி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததது. இதனால் பாலாறு, மோர்தானா, பொன்னையாறு, போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆனால் சதுபேரிக்கு மட்டும் நீர்வரத்து இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் செல்லும் நீரை சதுப்பேரிக்கு அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் திருப்பிவிட்டார். ஆனால் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் ஏரியின் கரை பகுதியில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு பெரிய பெரிய பள்ளங்களாக மாறியுள்ளது. குறிப்பாக சதுப்பேரி கிராமத்தில் இருந்து கொணவட்டத்திற்கு செல்லும் பகுதியில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டு கரை பெருமளவு சேதம் அடைந்துள்ளது. ஏரி நிரம்பியோ அல்லது வரும் நாட்களில் மழை பெய்தாலோ ஏரிக்கரையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு ஏரிக்கரை உடைந்தால் ஏராளமான வீடுகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி சதுப்பேரியின் கரையை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bank ,houses ,Vellore Konavattam ,Satuperi , Risk of breaking the bank of Satuperi in Vellore Konavattam: Public fear of ‘houses sinking’
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...