தண்ணீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு: கனமழை கொட்டியபோதும் வறண்ட கோயில் குளங்கள்: மீட்டெடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொட்டிய கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பியபோதும் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கோயில் குளங்கள் வறண்டுவிட்டது.காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில் மற்றும் குமரகோட்டம் முருகன் கோயில்கள் அனைத்திலும் திருக்குளங்கள் உள்ளன. சர்வதீர்த்தகுளம், ரங்கசாமி குளம், பொய்யாகுளம், மங்களதீர்த்தம், வெள்ளைகுளம், ஒக்கபிறந்தான்குளம் என நகரில் 25க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் அனைத்துக்கும் இணைப்பு உள்ளது.

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் லாலா கால்வாய் வழியாக வரும் தண்ணீர், சர்வதீர்த்த குளத்துக்கு வந்து நிரம்பும். பின்னர் அந்த குளத்தில் இருந்து உபரி நீர் ஏகாம்பரநாதர் கோயில் குளம், மங்களதீர்த்தம் குளத்துக்கு செல்லும். இந்தகுளங்கள் நிரம்பியதும் இதில் இருந்து வெளியேறும் உபரிநீர் பொன்னேரி ஏரியை சென்றடையும். இதுபோல், புத்தேரி கால்வாயில் இருந்துவரும் தண்ணீரில் வெள்ளகுளம், ஒக்கபிறந்தான்குளம் ஆகியவை நிரம்பி, மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் ரங்கசாமி குளம் உட்பட பல குளங்களுக்கு சென்றடையும்.காலப்போக்கில், குளங்களுக்கு வரும்  கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பால் தூர்ந்துவிட்டன.

இதனால் மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் காஞ்சிபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 217 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 95 ஏரிகள் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும் 69 ஏரிகள் 50 சதவீதத்துக்கு அதிகமாக நிரம்பி விட்டது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பொய்யாகுளம், அஷ்டபுஜ பெருமாள் கோயில் குளம், வைகுண்ட பெருமாள் கோயில் குளம், உலகளந்த பெருமாள் கோயில் குளம், மங்கள தீர்த்த குளம் ஆகியவை வறண்டு கிடக்கின்றன. இதற்கு செல்லும் கால்வாய் தூர்ந்துவிட்டதால் மழைநீர், மஞ்சள் நீர் கால்வாயில் கழிவு நீருடன் கலந்து வீணாக வெளியே செல்கிறது. ‘’கோயில் குளங்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களை சீரமைத்து மழைநீர் சேகரிக்க உரிய நடவடிக்கையை அறநிலையத்துறை அதிகாரிகளும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் எடுக்கவேண்டும்’ என்று என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: