×

ஜவ்வாதுமலை பகுதியில் ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் மலைக்கிராம மக்கள்

போளூர்: ஜவ்வாதுமலை பகுதியில் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து செல்லும் மலைக்கிராம மக்கள் மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஜவ்வாதுமலை  பகுதியில் 300க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சில இடங்களுக்கு சாலை வசதி போடப்பட்டுள்ளது. மேலும், சில கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் அப்பகுதியினர் நடந்து சென்று வருகின்றனர்.

அவ்வாறு நடந்த செல்லும் கிராமங்களுக்கு நம்மியம்பட்டு கிராமத்திலிருந்து சீங்காடு கிராமம் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த வழியில் முட்நாத்தூர், கீழ்நாடானூர், சேரமரத்தூர், குட்டக்கரை, பெரியவள்ளி, காணமலை என பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க, நம்மியம்பட்டு அல்லது ஜமுனாமரத்தூர் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் மக்கள் வழியில் ஒஞ்சிலாறு, பெரியஆறு ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். தற்போது பெய்த கன மழையால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீங்காடு கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது காட்டாற்றில் வெள்ளம் அதிகளவு சென்றதால், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், காட்டாற்றை கடந்து செல்ல முடியாததால், தகவலறிந்த ஜமுனாமரத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் ஆற்றை கடந்து 12 கிலோ மீட்டர் நடந்து சென்று பிரசவம் பார்த்தனர்.

இதன்காரணமாக அப்பகுதி மலைவாழ் மக்கள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்லவும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இந்த காட்டாறு வெள்ளத்தில் சிக்கி தற்காலிக தபால் ஊழியர் கே.மாதவன் உயிரிழந்தார். எனவே மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்பி சி.என்.அண்ணாதுரை, கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mountain villagers ,river ,area ,Javadumalai , Mountain village people
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்