×

கட்டுப்படுத்த வேளாண் துறை முன்வருமா? விழுப்புரத்தில் எலிகள் படையெடுப்பால் நெல், கரும்பு, மணிலா பயிர்கள் சேதம்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் உள்ளிட்ட வட்டாரங்களில் நெல், கரும்பு பயிர்களை எலிகள் சேதமாக்குவதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே, காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளால் பயிர்கள் சேதமாகி வரும்நிலையில், தற்போது எலிகள் படையெடுப்பால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் உணவுதானிய உற்பத்தி மற்றும் பயறுவகை சாகுபடியில் முன்னிலையில் உள்ளது. கடந்தசில ஆண்டுகளாக தொடரும் வறட்சி, உரம் விலை உயர்வு போன்ற பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் விவசாயம் நடந்து வருகிறது.  ஏற்கனவே, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகளால் கரும்பு, நெற்பயிர்கள் சேதமாகி விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், ஏற்படும் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வனத்துறையாலும், வேளாண்துறையாலும் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது புதுப்பிரச்னையாக விவசாயிகளுக்கு எலிகள் தொல்லை ஏற்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக நெல், கரும்பு, மணிலா பயிர்களில் எலிகள் படையெடுத்து பயிர்களை ஆரம்ப கட்டத்திலேயே சேதப்படுத்துவதால் உரிய மகசூல் கிடைக்காமல் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு உரியதீர்வு கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடிவருகின்றனர்.

செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் உள்ளிட்ட வட்டாரங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, மணிலா பயிர்களில் எலிகள் படையெடுத்து, சேதப்படுத்திவருகின்றன. இதனால், நெல் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவு பகலாக காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதுமட்டுமின்றி எலிகள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை பிடிப்பதற்காக கிடுக்கிப்பிடி அமைக்கப்பட்டு எலிகளை பிடித்து கொன்று குவித்த வண்ணம் உள்ளனர். எலிகளிடமிருந்து நெல் பயிர்களை பாதுகாக்க வேளாண்மைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எலிகளால் தினமும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட மூன்று வட்டாரங்களில் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த எலிகள் பிரச்சனை அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் தெரிவித்தும் மற்றும் திண்டிவனம் வேளாண்பல்கலைக்கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் நேரில்வந்து ஆய்வு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனால், ஏற்படும் பெரும் பாதிப்பினை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் சென்று ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், எலிகள் படையெடுப்பதை தடுக்கவேண்டிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரிவிக்கவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்த்துள்ளனர்.

எலிகளை கட்டுப்படுத்த என்ன வழி?

இதுகுறித்து, வேளாண்துறை பூச்சியியல் நிபுணர்  கூறுகையில், எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும் கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம். 5 கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீதம் ரசாயன பூச்சிக் கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி கவர்ச்சி உணவு அரிசி, பொரி, கருவாடு, கடலையுடன் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும். ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு  முன் 3 அல்லது 4 நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Department of Agriculture ,manila ,Paddy ,Viluppuram , Rat, paddy, sugarcane, manila crops
× RELATED மயிலாடி ஆலடிவிளையில் அட்மா திட்ட பயிற்சி