×

ஆலங்காயம், செங்கம் பேரூராட்சிகளில் ரூ.6.32 கோடியில் கசடு கழிவுநீர் மேலாண்மை திட்ட பணிகள்

வேலூர்: திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் வீடுதோறும் ‘செப்டிக் டேங்க்’ அமைத்து கழிப்பறைகள் கட்டித்தரப்படுகின்றன. இப்படி அதிகரித்து வரும் செப்டிக் டேங்க்களில் சேரும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில் ‘கசடு கழிவுநீர் மேலாண்மை’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளன. இதில் வேலூரில் 4 பேரூராட்சிகளும், திருப்பத்தூரில் 3 பேரூராட்சிகளும், ராணிப்பேட்டையில் 9 பேரூராட்சிகளும், திருவண்ணாமலையில் 10 பேரூராட்சி என மொத்தம் 26 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திருப்பத்தூரில் ஆலங்காயம் பேரூராட்சியிலும், திருவண்ணாமலையில் செங்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடைக்கு மாற்றாக கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வேலூர் மண்டல பேரூராட்சிகளில் முதற்கட்டமாக ஆலங்காயம், செங்கம் ஆகிய பேரூராட்சிகளில் ‘கசடு கழிவுநீர் மேலாண்மை’ திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் ரூ.3.66 கோடியில் 1.5 ஏக்கர் பரப்பரப்பில் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய தொட்டிகள் கட்டுமான பணிகள் தற்போது 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பேரூராட்சியில் ரூ.2.66 கோடியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய தொட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் மார்ச் மாதம் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்க கொண்டு வரப்பட உள்ளது என்றனர்.

Tags : Alangayam ,Sengam Municipalities , Sewage management
× RELATED ஆலங்காயம் அருகே விபத்தில் தந்தை...