×

வேலூர் மண்டலத்துக்குட்பட்ட அலுவலகங்களில் பத்திரப்பதிவில் ரூ.110.84 கோடி வருவாய் சரிவு

வேலூர்:  கொரோனா எதிரொலியாக வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் 2020-21ம் நிதியாண்டில் ரூ.110.84 கோடி வருவாய் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் கடந்த 2012ல் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு வைத்தாலும், அதை அடைவது என்பது எட்டாக்கனியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு பத்திரப்பதிவை அதிகரிக்கும் வகையில் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு அதிகரித்தது.

இதற்கிடையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் பத்திரப்பதிவு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு மேலும் சுலபமானது. இதனால் தினமும் பத்திரம் பதிவு செய்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக இலக்கை பதிவுத்துறை சுலபமாக எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அரசு நிர்ணயம் செய்யும் இலக்கை ஒவ்வொரு பத்திரப்பதிவு மண்டலங்களும் அடைய முடியாத நிலை உள்ளது.
வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 4 பத்திரப்பதிவு மாவட்டங்களில் 44 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன.

இதில், 2020-21ம் நிதி ஆண்டில் வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் நவம்பர் மாதம் வரை ரூ.401.33 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கு விட குறைவாக தான் வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. 2 மாதம் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடம் பணம் இல்லை. இதன் எதிரொலியாக பத்திரப்பதிவு குறைந்தது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நாள்தோறும் குறைந்த அளவில் டோக்கன் முறையில் பொதுமக்கள் பத்திரங்கள் பதிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தாண்டு நவம்பர் மாதம் வரை ரூ.401.33 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ரூ.290.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விட ரூ.110.84 கோடி வருவாய் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 40 ஆயிரம் 792 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் மீண்டும் பண புழக்கம் சற்றே அதிகரித்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பதிவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்களில் மார்கழி மாதம் பிறக்க உள்ளதால், பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. மீண்டும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பத்திரப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கில் 10 முதல் 20 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : offices ,Vellore , Registration
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...