×

இயற்கை சீற்றம்-உரிய விலை கிடைக்காத நிலை: வாழை விவசாயம் அடியோடு அழியும் அபாயம்

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நெல், வாழை, கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்கள் அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில், மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் வாழை பயிரிடப்படுகிறது. பத்து மாத கால பயிரான வாழையானது, வளர்ந்தவுடன் காற்று, மழைக்கு முறிந்து விழாமல் இருக்க, மூங்கிலால் தடுப்பு ஏற்படுத்துகிறார்கள்.
மரம் சாயாமல் பாதுகாத்து வரும் விவசாயிகள், பத்து மாதத்திற்கு பிறகு அறுவடை செய்த பின் விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தனியாரிடம் கொண்டு செல்கின்றனர். ஆனால், உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்திற்கே விற்பனை செய்யும் அவல நிலையில் உள்ளனர்.

கோபி மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் என்பதால் ஆண்டு தோறும் வாழை பயிரிட்டு வருகிறோம். எட்டு முதல் 9 மாதங்கள் வரை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றுகிறோம். ஆனாலும், சூறாவளி காற்று மற்றும் மழைக்கு முறிந்து விடுவதால் 700 ரூபாய் வரை விலை போகும் வாழைத்தார்களை 50 முதல் 100 ரூபாய் வரைகூட விற்க முடியவில்லை. பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை வேளாண்மை துறையினர் கொண்டு வந்தாலும் வாழை மரங்கள் முறிந்து விழாமல் இருக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இவ்வாறு பரமேஸ்வரன் கூறினார்.

கோபி பகுதியில் பெரும்பாலும் நேந்திரன், கதளி, மொந்தன், செவ்வாழை, பூவன், ரஸ்தாளி போன்ற உயர் வகை வாழைகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த ரக வாழைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் அதிகளவில் வாழை பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரில் வாழை பயிரிட சராசரியாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. அறுவடை செய்து, விற்பனை செய்யும்போது இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தொடர் மழை மற்றும் புயல் தாக்கம் காரணமாக வாழை விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பெருமாள் கூறினார்.

மற்ற பயிர்களில் நோய் தாக்குதல் மட்டுமே இருக்கும். அதற்கு வேளாண்மை துறையினர் உரிய தீர்வுகளை கூறுவதால் இழப்பு அதிகளவில் இருக்காது. ஆனால், வாழை குலை தள்ளி அறுவடை காலத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்போது மொத்த வாழையும் முறிந்து, பல கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் வரை காப்பீடு கட்டணம் செலுத்தினாலும், இயற்கை சீற்றங்களால் விவசாய பயிர்கள் சேதம் ஏற்படும்போது, இழப்பீடு போதிய அளவில் கிடைப்பது இல்லை. விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள். பத்து மாத உழைப்பு, முதலீடு அனைத்தையும் இழக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் வாழை சேதமடையும்போது, குடும்பத்தில் ஒருவரின் உயிர் போனது போன்று உள்ளது. எனவே, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். புயல் காரணமாகவும், கொரோனா வைரஸ் காரணமாகவும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவு வராத நிலையில், கடந்த மாதம் வரை கோபியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனையான வாழைத்தார் விலையை, தற்போது ஒப்பிடுகையில், தார் ஒன்றுக்கு 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். அரசு உரிய தீர்வு காணாவிடில் வாழை விவசாயம் அடியோடு அழிந்துவிடும். இவ்வாறு நஞ்சப்பன் கூறினார்.

Tags : Agriculture
× RELATED பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு;...