வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க நீர்முழ்கி பயிற்சி பெற்ற 20 தீயணைப்பு வீரர்கள் தயார்

குமரியில் வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை மீட்க, நீர்மூழ்கி பயிற்சி பெற்ற 20 தீயணைப்பு வீரர்கள்தயார்நிலை உள்ளனர் என மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு கூறினார். குமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு நாகர்கோவிலில் நிருபரிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் 2 குழுக்கள் வீதம் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள 134 தீயணைப்பு வீரர்கள் தவிர மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர்.

கடந்த ஓகியின் போது அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட காஞ்சாம்புறம், ஆற்றூர், பூதப்பாண்டி,  சுசீந்திரம் ஆகிய பகுதிகளில் மீட்பு குழுக்கள் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  மாவட்டத்தில் நீரில் வேகமாக நீந்துபவர்கள், நீர்மூழ்கிபயிற்சி பெற்ற வீரர்கள் என 20 தீயணைப்பு வீரர்கள் நாகர்கோவில், குழித்துறை ஆகியவற்றை மையமாக ெகாண்டு தலா 10 வீரர்கள் வீதம் இரு குழுக்களாக பிரிந்து உயிர்மீட்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

குமரி மாவட்ட தீயணைப்பு துறையை பொறுத்தவரை மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமான அளவு உள்ளன. மரங்களை அறுப்பதற்கு தேவையான பவர்ஷா இயந்திரங்கள் , கயிறு, ரப்பர் படகுகள், மோட்டார் பொருத்திய படகுகள் உள்ளிட்ட உபகரணங்களும் உள்ளன. பொதுமக்கள் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 101 என்ற நம்பரை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின் போது உதவி தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன், நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>