×

நாளை உள்ளூர் விடுமுறை: புனித சவேரியார் பேராலய தேர்பவனி

நாகர்கோவில்: கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் ஆடம்பரகூட்டுத் திருப்பலி நடந்து வருகிறது.  விழாவின் 8ம் திருவிழா அன்று தேர்பவனி வழக்கமாக ஆலயத்துக்கு வெளியே உள்ள வீதிகளில் வலம் வரும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேர் பவனியை நடத்துவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆலய வளாகத்தில் தேர்பவனி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருப்பலி நடந்தது.

மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி  கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடந்தது. முதலில் காவல் சமணஸ் தேரும், அதன்பின்னால் தூய செபஸ்தியார் தேரும், தொடர்ந்து புனித சவேரியார் தேரும் வந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரின் பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்வதற்கு ஆலயம் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கவில்லை. இன்று சிறப்பு மாலை ஆராதனைக்குபின் இரவு தேர்பவனி நடக்கிறது. திருவிழாவின் நிறைவு நாளான நாளை காலை 11 மணிக்கு சிறப்புத் தேர்ப்பவனி நடக்கிறது. 10ம் திருவிழாவையொட்டி நாளை(3ம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags : holiday ,St. Xavier's Cathedral , St. Xavier
× RELATED ஏப்ரல் 2 முதல் தேர்வுகள் தொடக்கம் 1...