தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவை வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் ரத்து செய்யப்படட நிலையில், அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.  மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் பல்கலைக்கழகங்களில் அரியர்கள் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்குகள், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது 300க்கும்  மேற்பட்ட மாணவர்கள் காணொலியில் நுழைந்து நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அனைத்து வழக்குகளின் விசாரணையும் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் தொடங்கியது முதல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் கிடைக்கும் காட்சிகளை சில மாணவர்கள் சட்டவிரோதமாக  யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

இந்த விஷயம் நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து,  சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்  என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.மனுதாரர் தரப்பில் ஆஜரான விஜய் ஆனந்த் வாதிடும்போது, தேர்வு எழுதாமல் அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது. இது மாணவர்களின் திறனை பாதிக்கும் என்றார். யுஜிசி சார்பில் ஆஜரான வக்கீல் சுதா வாதிடும்போது, பல்கலைக்கழக மானிய குழு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்று அறிவிக்க கூடாது என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் வாதிடும்போது, மாணவர்களின் முந்தைய பிராக்டிகல் மற்றும், இன்டர்னல் அசஸ்மென்ட் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் பல்கலைக்கழகங்கள் முடிவெடுக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றார்.

பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில், “யுஜிசி விதிகளுக்கு முரணாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக்கழகங்கள் முடிவு வெளியிட கூடாது. பல்கலைக்கழகங்கள் ஆப்லைன் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். வழக்கு ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது மாணவர்கள் தரப்பில் தொந்தரவு தொடர்ந்து வந்துள்ளது. எனவே, இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தரவிடப்படுகிறது.

Related Stories:

>