வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன் துப்பாக்கியால் சுட்டுபிடிப்பு: பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை

பெங்களூரு: பெங்களூரு நந்தினி லே அவுட்டில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார் துப்பாக்கியால்  சுட்டுபிடித்துள்ளனர். பெங்களூரு நகரில் கடந்த 22ம் தேதி குருபரஹள்ளியில் தனியாக நடந்து சென்ற வாலிபரை வழிமறித்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. 23ம் தேதி  சஞ்சய்நகரில் காரை வழிமறித்து, டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போன் பறிக்கப்பட்டது. நவ.25ம் தேதி ஆர்.எம்.சியார்டு உல்லால்  திரையரங்கு, நவ்ரங் திரையரங்கு அருகே பைக்கில் சென்றவர்களிடம் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட மர்ம நபர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். மேலும் நந்தினி லே அவுட் சரகத்திற்குட்பட்ட ரிங்ரோடு அருகே நள்ளிரவில் லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்களை வழிமறித்து இரும்பு ராடு கொண்டு  தாக்கி ₹30 ஆயிரம் ரொக்கம், செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நந்தினி லே அவுட் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். இருவரின் உயிருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லையென்றாலும், தனியாக வந்தவர்களை மடக்கி தாக்கும் அளவிற்கு மர்ம நபர்களின்  அட்டகாசம் இருந்ததால், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்காக நந்தினி லே அவுட் சப் இன்ஸ்பெக்டர் ஜோகண்ணவர் மற்றும் கான்ஸ்டபிள் அபிஷேக் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து  விசாரித்து வந்தனர். அதில் பிரபல வழிப்பறி கொள்ளையனான அல்லா பகாஷ் (20) என்ற இளைஞர் தனது நண்பருடன் இந்த கொள்ளையில்  ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. அவரை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அல்லாபகாஷ், நந்தினி லே அவுட் கூலி பிரிட்ஜ் அருகே தலைமறைவாக  இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அல்லாபகாஷை  கைது செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் காவலர் அபிஷேக்கை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடினார்.

இதை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஜோகண்ணவர், அவரை கைது செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டார். இதில் அல்லா பகாஷின் வலது காலை  குண்டு துளைத்தது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பவுரிங்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த காவலருக்கு மற்றொரு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அல்லாபகாஷ் மீது நந்தினி லே அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>