குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம்

பெங்களூரு: மழைக்காலம் முடிந்து குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் பொதுமக்கள்  காய்ச்சல், இருமல் உள்பட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  பருவ நிலை மாறும்போது, தட்ப-வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக மக்களுக்கு தொற்று நோய் பரவுவது வழக்கம். தற்போது மழைக்காலம்  கொஞ்சம் கொஞ்சமாக முடிந்து, குளிர் காலம் ஆரம்பமாகி வருகிறது. குளிர்கால ஆரம்பத்திலேயே பொதுமக்கள் காய்ச்சல், இருமல், ஜலதோஷம்,  அம்மை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட தொடங்கியுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். பெங்களூரு உள்பட  மாநிலத்தின் பல பகுதிகளில் காய்ச்சல் தாக்கி பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் இறுதி வரை பெங்களூரு உள்பட 23 மாவட்டங்களில் கனமழை பெய்ததால், வெள்ள பெருக்கு ஏற்பட்டது.  நவம்பர் மாதம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக மாறியதால் நான்கு நாட்கள் மழை பெய்தது. இதனால்  மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது. நதிகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பூமி  முழுவதும் ஈரபதத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக பனி தொடங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் காற்று வீசுவதால், இரவில் கடும் குளிர் வாட்டுகிறது. பொதுவாக  தட்ப-வெப்ப நிலைமாறும்போது, சில கிருமிகள் உற்பத்தியாகி மக்களை பாதிக்க செய்யும். இது போன்ற சமயத்தில் லேசான காய்ச்சல் வந்தாலும்,  அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தட்ப-வெப்ப நிலையில் மாற்றம்: கடந்த 49  ஆண்டுகளுக்கு பிறகு, பெங்களூருவின் தட்பவெப்பம் 10 டிகிரி செல்சியசாக  குறையும் என வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்னும் சில  நாட்களில் மாநகரில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும் என தெரிகிறது. வங்க  கடலில்  ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகாவின்  சில இடங்களில் மழை பெய்ததால் தற்போது தட்பவெப்ப நிலை சரிந்து  வருவதாக  வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

* தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, ஆறிய பின் குடிக்க வேண்டும்.

* பிரிட்ஜ்களில் பாதுகாத்து வைத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

* எளிதில் ஜீரணமாகும் வகையில் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

* காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவைகள் தாக்கினால், மற்றவர்களுக்கு தொற்றிக் கொள்ளாத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.

* திறந்த வெளியில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* தூசி, புகை போன்றவைகளில் இருந்து சற்று தள்ளி இருக்க முயற்சிக்க வேண்டும்.

* வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் மருந்து-மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Related Stories:

>