×

மீண்டும் மிதக்கும் ஒலிம்பிக் வளையங்கள்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்ட 5 வண்ண பிரமாண்ட ஒலிம்பிக் வளையங்கள் கொண்ட மிதவை படகு ஜப்பான் கடலில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்த கோடைகால ஒலிம்பிக் போட்டி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. எனினும், போட்டியை நடத்துவதற்கான திட்டமிடல் பணியில் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்தும் முயற்சியாக ஒடைபா மெரைன் பூங்காவில் பிரமாண்டமான 5 வண்ண ஒலிம்பிக் வளையங்கள் மிதக்க விடப்பட்டு இருந்தன. அந்த வளையங்கள் ஆக.6ம் தேதி அகற்றப்பட்டன.

இழுவை படகு மூலம் அங்கிருந்து கப்பல் பராமரிப்பு பகுதிக்கு ஒலிம்பிக் வளையங்கள் நிறுவப்பட்ட மிதவை கொண்டு செல்லப்பட்டது. ‘பராமரிப்பு பணிகளுக்காகவே ஒலிம்பிக் வளையங்கள் கடலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் முடிய இன்னும் 4 மாதங்கள் ஆகும். அதன்பிறகு மீண்டும் ஒலிம்பிக் வளைங்கள் அதே இடத்தில் வைக்கப்படும்’ என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியிருந்தது. இந்நிலையில் வண்ண ஒலிம்பிக் வளையங்களுடன் கூடிய மிதவை படகு நேற்று காலை ஜப்பான் கடலுக்கு மீண்டும் இழுத்து வரப்பட்டது. டோக்கியோ வளைகுடாவில் வானவில் பாலத்தின் அருகே அந்த படகு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Olympic , Back floating Olympic rings
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...