×

கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீசை ஒட்ட நாங்கள் உத்தரவிடவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு வெளியே, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான பேனர் அல்லது நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவது அவர்களின் அந்தரங்கம், வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது.

மேலும், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களிடமும், சமூக ஊடக குழுக்களிலும் கொரோனா நோயாளிகளின் பெயர்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது நோயாளிகளை களங்கப்படுத்தும் செயலாக உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘கொரோனா பாதித்தவர்களின் வீடுகளின் வெளியே நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசுக்கு யாருக்குமு் உத்தரவிடவில்லை. அது தொடர்பாக, மாநிலங்களுக்கு எந்த அறிவுறுத்தலையும் மத்திய அரசு வழங்கவில்லை. மாநில அரசுகளே தன்னிச்சையாக இதுபோல் நோட்டீஸ் ஒட்டும் முறையை பின்பற்றி வருகின்றன. மேலும், இது குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’’ என்றார். இதைத் தொடர்ந்து, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Tags : homes ,corona victims , We did not order the isolation notice in the homes of corona victims: Federal Interpretation
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...