ஆஸ்திரேலியா டி20 அணியில் ஷார்ட்: பயிற்சியாளர் லாங்கர் பேட்டி

கான்பெரா: காயம் காரணமாக சிகிச்சையில் உள்ள டேவிட் வார்னருக்கு பதிலாக, ஆஸ்திரேலியா டி20 அணியில் டார்கி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார் என்று, அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சிட்னியில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், பீல்டிங் செய்த போது, விழுந்து காயமடைந்தார். அவரது காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக குறைந்தது 3 வாரங்கள் ஆகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில், வார்னர் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக டார்கி ஷார்ட், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள வசதியாக வார்னருக்கும், பாட் கம்மின்சுக்கும் ஓய்வு கொடுத்துள்ளோம். இருவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள். டெஸ்ட் தொடர் துவங்கும் முன்னர் வார்னர் குணமடைந்து விடுவார் என நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாளைய போட்டியில் குல்தீப் யாதவ்?  

நாளை கான்பெராவில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ், நடராஜன், ஷர்துல் ஆகியோர் நாளை களம் இறங்கலாம். குல்தீப் யாதவ், ஐபிஎல் போட்டிகளில் ஜொலிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>