கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் : முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த பின் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை : தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.முன்னதாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் இன்று காலை சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். ஆனால் போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினரை, போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், சாலை மறியல் செய்ததோடு ரயில்களை வழி மறித்து அதன் மீது கற்களை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, வன்னியர்களுக்கு 20% இட இதுக்கீடு வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் பழனிசாமியிடம் அன்புமணி ராமதாஸ் அளித்தார். அன்புமணி ராமதாஸுடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20% இட ஒதுக்கீடு வேண்டும்.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு இன்று சென்னையில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சனையாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக உள்ளது வன்னியர் சமுதாயம்.வன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள், காவல்துறை திடீரென்று வன்னியர்களை வழிமறித்து நிறுத்தியது. இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்சினை அல்ல, உரிமை பிரச்சினைஎங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்து இருக்கிறார் எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்களது போராட்டம் 40 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது,என்றார்.

Related Stories:

>