×

செலவிப்நகர், கோலனிமட்டம் சாலையில் மண் குவியலால் மக்கள் அவதி தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

ஊட்டி: ஊட்டி அருகே செலவிப்நகர், கோலனிமட்டம் சாலையில் மண் குவிந்து சேறும்,சகதியுமாக உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஊட்டி அருகே செலவிப்நகர், கோலனிமட்டம் உள்ளிட்ட கிராம பகுதிகள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் முட்டிநாடு முதல் காட்டேரி டேம் வரையிலான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையின் இருபுறமும் மலை காய்கறி விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளன. மழை காலங்களிலும், காய்கறிகளுக்கு தண்ணீ பாய்ச்சும் போதும் ஏராளமான மண் அடித்து வரப்பட்டு சாலையில் குவிந்து விடுகின்றன. மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் சாலையும் அடிக்கடி சேதமடைந்து விடுகிறது.

இதனால் சாலையில் பல இடங்களில் பள்ளமாகவும், மண் குவிந்து சேரும் சகதியுமாக உள்ளதால் சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து செலவிப்நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில், எங்கள் பகுதிக்கு பஸ் வசதி கிடையாது. சுமார் 2 கி.மீ., தூரம் காட்டேரி டேம் வரை நடந்து சென்று பஸ்களுக்கு சென்று வருகிறோம்.

சாலையின் பல இடங்களில் மண் குவிந்து சேறும் சகதியுமாக மாறி இருப்பதுடன் சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சாலையை மிகவும் கஷ்டத்துடனேயே சாலையை பயன்படுத்தி வருகிறோம். எனவே விவசாய நிலங்களில் இருந்து மண் சாலைக்கு வராத வகையில் தடுப்புச்சுவர் அமைத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : level road ,Colony , Barrier
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...