×

புயலால் முறிந்த சவுக்கு மரங்கள்: நிவாரணம் இல்லாததால் விவசாயிகள் வேதனை

கடலூர்: வட கிழக்கு பருவ மழை மற்றும் புயலால் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, மணிலா உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் பரவலாக சுமார் 5,000 ஏக்கர் அளவில் சவுக்கு நடவு இடம் பெற்றுள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை வளர்ந்த சவுக்கு மரங்கள் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் புயல் மற்றும் தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தானே உள்ளிட்ட புயல் தாக்கத்தின் போது சவுக்கு மரங்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், அதற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சவுக்கு மரங்களை விவசாய பயன்பாட்டில் இருந்து அகற்றி வனத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை சவுக்கு மரங்களுக்கு வழங்க இயலாது எனவும் விவசாய துறையினர் கூறியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதிப்புக்குள்ளான சவுக்கு மரங்களுக்கு இழப்பீடு பெற முடியாமலும், நிவாரணம் கிடைக்காமலும், அதனை விற்பனையும் செய்ய முடியாமலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். சவுக்கு மரங்களை விவசாய சாகுபடியாக இடம் பெற செய்ய வேண்டும். நிவாரண பட்டியலில் இணைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Farmers
× RELATED ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு...