×

பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா? : முதல்வர் பழனிசாமிக்கு மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கண்டனம்

சென்னை : பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.,இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றைய தினம் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நிவர் புயல் பாதிப்பை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வர இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக செய்தி பரவியது. தாம்பரத்தில் ஒரே நாளில் பெய்த 30 செ.மீக்கும் மேலான மழையாலும், ஏரிகளில் நிறைந்த உபரி நீராலும், பாதிக்கப்பட்டு பரிதவித்துக்கொண்டிருந்த செம்மஞ்சேரி, சுனாமிநகர், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், ஜவஹர் நகர் போன்ற பகுதிகளைச் சார்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், நம்முடைய குறைகளை கேட்கதான் முதலமைச்சர் வருகிறார் என்று ஆவலோடு காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்.

ஆனால் ஏதோ வெள்ளப்பெருக்குகளை பார்வையிட போகிறேன் என்று சொல்லி எப்போதுமே நிரந்தர நீர்நிலைகளாக இருக்கிற துரைப்பாக்கம் ஒக்கியம்மடுகு, முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு தன்கடமையை நிறைவேற்றி உள்ள முதலமைச்சர்தான், சூரியன் உதிப்பதில் தொடங்கி, அது மறைந்த பிறகும், மக்கள் பணியாற்றுவதற்காக வீதி, வீதியாக உலா வந்துகொண்டிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் எங்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பார்த்து ‘வெளியே வந்து பாருங்கள்’ என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிகொட்டியிருக்கிறார்.

கழகத் தலைவர் தளபதி அவர்கள் ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக, சென்னை மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயராக, தமிழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின்போது உள்ளாட்சித் துறையின் அமைச்சராக, தமிழக துணை முதல்வராக, இருந்தபோதும் அல்லது இப்போது கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, மாண்புமிகு பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தற்போது இருந்துகொண்டிருக்கிறபோதும், தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிற நேரங்களிலெல்லாம், மக்கள் வாழும் பகுதிக்கு “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம்...”  என்கிற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப விரைந்துச் சென்று உதவிக்கரம் நீட்டி, துயர் துடைக்கும் மக்கள் தலைவராக இருந்து வருவதை நாடும், ஏடும், நற்றமிழ் மக்களும் நன்கறிவர். ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு, அடுத்த வேளை உணவுக்கு அல்லல்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், இதோ முதலமைச்சர் வருவார், நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவார் என்று காத்திருந்த சூழ்நிலையில், அவர்களை அலட்சிப்படுத்திவிட்டு, சேற்றுப்பகுதியில் சிவப்பு கம்பளம் விரித்து அதன்மேல் நடந்துசென்று, ஆற்றுநீரைப் பார்த்துவிட்டுவந்த பிவீயீவீ முதலமைச்சர் இந்தியாவிலேயே இவரைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

முதலமைச்சரும், பெரும்பகுதியான நாட்களை சென்னையில் இருந்தால் கொரோனா வந்துவிடும் என்று கருதி, சேலத்திலேயே பதுங்கி இருந்ததையும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒரு சிலர், தங்கள் வீட்டு வாயிலில், “கொரோனாத் தொற்று முடிவடையும் காலம் வரை, வீட்டிற்கு பொதுமக்களோ, அதிகாரிகளோ வரவேண்டாம்” என்று விளம்பரப்படுத்தி இருந்த கொடுமையை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எண்ணி எகத்தாளம் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

கொரோனா அச்சம் உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே  கொளத்தூரிலும், சைதாப்பேட்டையிலும், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்களையும் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களையும், நேரில் சந்தித்து, நிவாரண உதவிகளைத் தந்து ஆறுதல் சொல்லி அன்னையைப் போல் அரவணைத்தவர் எங்கள் தலைவர் தளபதி அவர்கள். ஆனால் அந்த காலக்கட்டத்தில், மக்கள் பணியாற்றிய ஒரு அமைச்சரையோ அல்லது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரையோ அடையாளம் காட்ட எடப்பாடியால் முடியுமா?

ஏப்ரல் 20ஆம் தேதி ‘ஒன்றிணைவோம் வா’ என்று ஒரு சீரிய திட்டத்தைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கும் மேலானவர்களுக்கு உணவுப்பொருட்களும், மருத்துவ உதவிகளும் கழகத் தலைவர் வழங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிம்மதியாக கொரட்டை விட்டுவிட்டு,  அதனைக்கூட ஈவ இரக்கமில்லாமல் கொச்சைப்படுத்திவிட்டு, இப்போது விளம்பர வெளிச்சத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் மனிதர் நீங்கள் என்பதை நாடு நன்கறியும்.

நிவர்  புயலின் தாக்கம், சீற்றம் குறையாதபோது, பெருமழை விடாமல் பெய்துக்கொண்டிருக்கிற நேரத்திலேயே முழங்கால் அளவு நீரில் நனைந்துகொண்டேசென்று, முதல்நாள் முழுவதும் கொளத்தூர், திரு.வி.க. நகர், எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம் போன்ற தொகுதிகளிலும், மறுநாள் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பெரம்பூர், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகியத் தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்களை மக்களை நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கி ஆறுதல் சொன்னவர் எங்கள் அருமைக்குரிய தளபதி.

அவர் செய்ததுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள் துயருக்குள்ளான மக்களை நேரில் சந்தித்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தி கோடிக்கணக்கானத் தமிழர்கள் நிவாரண உதவிகள் பெற காரணமாக இருந்தவர் எங்கள் தலைவர். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு பேசுவது முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழகல்ல.

சென்னை மாநகராட்சி உருவான காலத்திலிருந்து, வணக்கதிற்குரிய சென்னை மேயராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற காலம் வரையில், சென்னையில் இருந்த மழைநீர்வடிகால்வாய்களின் அளவு 636 கி.மீ. மட்டுமே... ஆனால் அவர் சென்னையின் மேயராக, ஆட்சியின் உள்ளாட்சித் துறை அமைச்சராக தமிழகத்தின் துணை முதல்வராக இருந்தபோது ஆற்றிய பணிகளின் விளைவாக தற்போது சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களின் அளவு 2071 கி.மீட்டர் அளவு உயர்த்தப்பட்டது என்பதையும், அதனால்தான் இப்பெரு வெள்ளக்காலத்திலும் சென்னை நகர மக்கள் பெருமளவு பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்பதையும் தரையில் தவழ்ந்து பதவிக்கு வந்த பழனிச்சாமி அறிந்திருக்க நியாயமில்லை!

எங்கள் தலைவர் அடிக்கடி சொல்வதைப் போல கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதை இனியாவது பழனிச்சாமி நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : river ,Palanisamy ,Subramanian MLA , Chief Minister Palanisamy, Ma. Subramanian, MLA, condemned
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி