×

பொதிகை டி.வி.யில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தினமும் 15 நிமிடம் ஒதுக்கக் கோரிய மத்திய அரசின் ஆணைக்கு எதிராக முறையீடு!!

டெல்லி : பொதிகை டி.வி.யில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தினமும் 15 நிமிடம் ஒதுக்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், தூர்தர்ஷனில் தினமும் காலை 7.15 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் ஒளிபரப்பாகும் சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநிலங்களும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் வாராந்திர செய்தி தொகுப்பை ஒளிபரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புககேழந்தி ஆகியோர் இன்று காலை வழக்கம் போல் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் கண்ணன் ஆஜராகி, ‘‘பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடத்திற்கு சமஸ்கிருத செய்தியை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் இச்செயல் உள்ளது.

தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே பொதிகை தொலைகாட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி மனு செய்கிறேன், இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொளள் வேண்டும்,’’ என்றார். அப்போது நீதிபதிகள் ‘‘மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்,’’ என்றனர். இதைத் தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.


Tags : Central Government , Package, TV, Sanskrit
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....