×

ஓய்வுபெற்றாலும் என் சேவை தொடரும்: தபால்காரர் சிவன் நெகிழ்ச்சி

குன்னூர்: தபால்காரர் சிவன் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பழங்குடியின மக்களை பார்க்க தினமும் 15 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்தே சென்று வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தபால்காரர் சிவன் (62). இவர், கடந்த 35 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றினார். ஹில்குரோவ் தபால் நிலையத்தில் 10 ஆண்டுகளாக கிராம தபால்காரராக பணியாற்றி கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். தினமும் காலை குன்னூர் தபால் நிலையத்திற்கு வந்து தபால்களை பெற்றுக்கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றை அடி பாதையில் சுமார் 15 கி.மீ. நடந்தே சென்று சிங்கார வனப்பகுதி வழியாக ஹில்குரோவ் தபால் நிலையத்திற்கு சென்று தபால்களை ஒப்படைத்து வந்தார்.

அங்கிருந்து தபால்களை பெற்று வடுகன் தோட்டம் மரப்பாலம், சுற்றுப்புற ஆதிவாசி கிராமங்களில் உள்ள பழங்குடியினர், ஏழை, எளிய மக்களுக்கு பட்டுவாடா செய்து வந்தார். இந்தக் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதால் மக்களின் தபால்துறை சேமிப்பு, சிறு சேமிப்பு திட்டங்கள், முதியோர் உதவித்தொகை, மணியார்டர் பதிவு, தபால் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்த்து வந்தார். 65 வயதிலும் மனம் தளராத சிவன், தினமும் அடர்ந்த வனப்பகுதியில், கரடு முரடான பாதை வழியாக 15 கி.மீ. நடந்து சென்று ஆதிவாசி மக்களுக்காக பல உதவிகளையும், தபால் சேவைகளையும் செய்து வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரது சேவையை பாராட்டி பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர். கர்நாடக மாநில பா.ஜ. எம்.பி. சந்திரசேகரராவ் இவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். சமீபத்தில், தீபாவளியன்று தனியார் தொலைக்காட்சி மூலம் நடிகர் கமல்ஹாசன் தபால்காரர் சிவனை பாராட்டி உள்ளார்.

இந்நிலையில், நேற்று சிவன் பழங்குடியின மக்களின் கிராமத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கூறுகையில், நான் கடந்த 10 ஆண்டுகளாக வனப்பகுதி வழியாக நடந்து சென்று வருகிறேன். இங்குள்ள மக்களின் தேவைகளை என்னால் முடிந்த வரை பூர்த்தி செய்து வந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்றாலும் இங்குள்ள மக்களை என்னால் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. மனதிற்கு தோன்றும் போதெல்லாம் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்று மக்களின் நலன்களை கேட்டறிந்து வருகிறேன். ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா காரணமாக செல்ல முடியவில்லை’ என்றார். ஓய்வு பெற்றாலும் இப்பகுதி மக்களை காண சென்று வரும் தபால்காரர் சிவன் பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

Tags : retirement , Postman Shivan
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்