×

பவானிசாகர் அணைக்கு வந்த காட்டு யானைகள்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை பகுதிக்கு வந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் மாலை நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி அணை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வனத்தைவிட்டு வெளியேறிய 6 காட்டு யானைகள் அணையின் கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதிக்கு வந்து புற்களை மேய்ந்தபடி சுற்றித்திரிந்தன.

யானைகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழத்தோட்டத்தை நோக்கி செல்வதை அறிந்த பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அதன்பின், காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பட்டாசு சத்தம் கேட்ட காட்டு யானை கூட்டம் பிளிறியபடி வனப்பகுதிக்குள் ஓடின. தினமும் மாலை நேரத்தில் யானைகள் கூட்டம், கூட்டமாக பவானிசாகர் அணை பகுதிக்கு வருவதால் அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்களும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களும் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bhavani Sagar Dam: Forest Department , Wild elephants
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!