×

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக பேரெழுச்சி...கடும் குளிரிலும் 6வது நாளாக போராட்டம் நடத்தும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்

டெல்லி : மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 6-வது நாளாக இன்றும் தொடருகிறது. டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளிலேயே படுத்துறங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர். விவசாயிகளின் இந்த பேரெழுச்சியால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.

இவ்வாறு மாபெரும் போராட்டங்களை நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை இச்செய்திதொகுப்பில் காணலாம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முதற்கட்ட கோரிக்கையாகும். அதாவது அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் மற்றும் விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திகின்றனர். இதனால் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது, விவசாய வர்த்தகத்தின் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கார்ப்பரேட்கள் வசமாகும் என அடுக்கடுக்காக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே போல் விவசாயிகளுக்கான சலுகையை பறிக்கும் மின்சார சட்டத்திருத்தம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பொய் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரை விடுவித்து, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : uprising ,Central Government ,Delhi , Delhi, Central Government, Struggle, Farmers, Demands
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...