×

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பங்கேற்ற காணொளி காட்சி வாயிலான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது? சட்டமன்ற தொகுதிகளை எப்படி தேர்வு செய்வது? மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எப்படி வலிமைப்படுத்துவது? எப்படி  ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது? என்பது குறித்து விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 மத்தியில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சி தமிழக மக்களுக்கு விரோதமாக எப்படி செயல்படுகிறது? தமிழ் மொழியின் தனித்தன்மையை எப்படி சிதைத்து வருகிறது, நீட் தேர்வு திணிப்பு, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு  போன்ற தமிழக விரோத நடவடிக்கைகளை குறித்து தீவிர பரப்புரை மேற்கொள்வது என விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போவதை மக்களிடம் விரிவான பரப்புரை மேற்கொள்வது, இதன் அடிப்படையில் மக்கள் ஆதரவை திரட்டுவது என்ற கருத்தும் கூறப்பட்டது. எதிர்வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.  நிறைவாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும்போது, தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலமாக கட்சி மேலும் வலிமை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக ஆட்சியால் தற்போது பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில் வருகிற சட்டமன்ற தேர்தல் அமைய காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்.

 காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ப.சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் ஏ.செல்லக்குமார் எம்.பி., ப.மாணிக்கம் தாகூர் எம்.பி.,சஞ்சய் தத்,  சிரிவெல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், ஜோதிமணி எம்.பி., மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் செயல் தலைவர்கள் கே.ஜெயக்குமார் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., மயூரா எஸ்.ஜெயக்குமார்,மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துக்களை கூறினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 



Tags : Rahul Gandhi ,executives ,elections ,Tamil Nadu Assembly , Regarding the Tamil Nadu Assembly election Rahul Gandhi consults with senior executives
× RELATED சொல்லிட்டாங்க…