வரும் 4ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து கேட்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், வரும் 4ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகின்றது. நாட்டில் மூன்று இடங்களில் தயாரிக்கப்பட்டு வரும் வெவ்வேறு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளை பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய போது கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர்களிடம் அவர் வலியுறுத்தினார்.  

இந்த சூழலில் வருகிற 4ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகம் அனைத்து கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. கொரோனா நோய் தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு பின் நடத்தப்படும் இரண்டாவது அனைத்து கட்சி கூட்டம் இதுவாகும்.  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி, இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே சமயம், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை பட்ஜெட் கூட்டத்தொடருடன் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவதால் இவ்விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மொழியில் புரிய வையுங்கள்

அகமதாபாத், ஐதராபாத் மற்றும் புனேவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி கடந்த சனியன்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார். இந்நிலையில் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று குழுக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடுப்பூசி பற்றி ஒரு எளிய மொழியில் சாதாரண மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் செயல்திறன் போன்ற தொடர்புடைய விஷயங்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். நாடு மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இந்த உற்பத்தி நிறுவனங்களின் முயற்சி பயன்பெறும் வகையில் தேவையான அனைத்து விவகாரங்களையும் தீர்த்து வைக்குமாறு அனைத்து துறைகளுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்’’ என கூறியுள்ளது.

* அடுத்த ஆண்டின் முதல் 3 அல்லது 4 மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கப் பெறும்.

* ஜூலை - ஆகஸ்ட்டில் 25-30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.

* அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.-மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Related Stories:

>