சிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா?

மும்பை: பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மதோங்கர் இன்று, முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கேரயின் முன்னிலையில் சிவசேனா கட்சியில் சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ஊர்மிளா மதோங்கர், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி வெற்றி பெற்று எம்.பி.யாகிவிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். மும்பை காங்கிரஸ் தலைவர்கள் இடையே நிலவும் கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் அந்த கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

 இதன் இடையே மகாராஷ்டிரா சட்டமேலைவையில் காலியாக இருக்கும் 12 நியமன உறுப்பினர்கள் பதவிக்கு புதிதாக 12 பேரை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் கவர்னர் நியமிக்கவிருக்கிறார். இந்த பதவிகளுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா சார்பில் தலா 4 பேரது பெயர்கள் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியிடம் தரப்பட்டுள்ளது.

 சிவசேனா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் நடிகை ஊர்மிளா மதோங்கர் ஆவார். இந்த நிலையில்தான், நடிகை ஊர்மிளா இன்று முதல்வர் உத்தவ் தாக்கரேயின் முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைய உள்ளதாக அவருடைய நெருங்கிய உதவியாளர் ஹர்ஷால் பிரதான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இது உண்மையல்ல, புரளி எனவும், அந்த கட்சியில் நான் இணையவில்லை எனவும் நடிகை ஊர்மிளா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories:

>