×

பார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்

பஹ்ரைன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஹாஸ் பெராரி அணி வீரர் ரோமைன் குரோஸ்ஜீன் அதிர்ஷ்டவசமாக கை விரல்களில் ஏற்பட்ட தீ காயத்துடன் உயிர் தப்பினார். விறுவிறுப்பான பந்தயத்தில் மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த குரோஸ்ஜீன் கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளின் மீது மோதி இரண்டாக உடைந்ததுடன் தீப்பிடித்து எரிந்தது. சுமார் 30 விநாடி போராட்டத்துக்குப் பிறகு காருக்குள் இருந்து வெளியே வந்த குரோஸ்ஜீன் கைகளில் கடுமையான தீ காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக பார்முலா 1 வரலாற்றில் 1991ல் மொனாக்கோவில் நடந்த விபத்தில் தான் ஒரு கார் இரண்டாக உடைந்துள்ளது. 1980ல் இமோலாவில் நடந்த விபத்தில் தீ பிடித்து எரிந்தது.

அமெரிக்காவின் வாட்கின்ஸ் கிளென் களத்தில் 1973 மற்றும் 74ல் நடந்த விபத்துகளில் டிரைவர்கள் பிரான்கோயிஸ் செவெர்ட், ஹெல்மட் கோய்னிக் பலியானது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைனில் தொடர்ந்து நடந்த பந்தயத்தின் முடிவில் மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2வது இடமும், சக வீரர் அலெக்சாண்டர் அல்பான் 3வது இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து, வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் பார்முலா 1 நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



Tags : Croszin ,accident , Croszin escaped a horrific accident in Formula 1 racing
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...