கட்சி வளர்ச்சிக்காக மூத்த தலைவர்களிடம் ஆலோசனை பெற முடிவு : மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 40 பேரிடம் ஆலோசனை நடத்தினோம். இதுபோல் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் கருத்துக்களை பெறுவதற்கு முடிவு செய்துள்ளேன் என டிகே சிவகுமார் கூறினார். பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பஞ்சாயத்துராஜ் தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து டிகே சிவகுமார் கூறுகையில்,” காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைகள் பெறுவதற்கான முயற்சி இது ஆகும். இது போன்ற ஆலோசனைகள் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், அடுத்து வருகிற பொது தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. நில சீர்த்திருத்த சட்ட திருத்தங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பாஜ அரசுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்த முதல் நாளே இது போன்ற சட்டங்கள் ரத்து செய்யப்படும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மத்திய அரசு விவசாயிகள் வங்கி கடன் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு வந்த பாஜ அரசு விவசாயிகளில் குரல் வளையை நெரித்து வருகிறது. ஷிரா மற்றும் ஆர்ஆர்நகர் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து வருகிறோம். அடுத்த தேர்தலில் இது போன்ற சம்பவம் மறுபடியும் நிகழாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நேற்று நடந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த அகமதுபட்டேல், தருண் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம் என்றார்.

Related Stories:

>