அரசியலில் எதிரிகளை வெல்ல யாகம் நடத்திய பரமேஸ்வர் குடும்பத்தினர்

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் அமைச்சர் ஜி.பரமேஸ்வர் குடும்பத்தினர் ஓசூரில் உள்ள ஸ்ரீமகா பிரத்தியங்கரா தேவி திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினர்.  கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் டாக்டர் ஜி.பரமேஸ்வர். 5 முறை பேரவை உறுப்பினராகவும் ஒருமுறை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை உள்பட பல துறைகளின் அமைச்சராக இருந்தார். கடந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துணைமுதல்வராக இருந்தார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக 9 ஆண்டுகள் இருந்தார். அவர் தலைவராக இருந்தபோது கடந்த 2013ல் நடந்த சட்டப்பேரவை பொது தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது.

மாநில காங்கிரஸ் கட்சியில் பலமான தலைவராக இருந்தும் அரசியலில் பல பின்னடைவுகளை சந்தித்து வருவதால், அவரின் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு யாகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் பவுர்ணமி நாளில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் வத்தல் மிளகாய் யாகம் மற்றும் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினர், பரமேஸ்வரின் மனைவி உள்பட குடும்பத்தினர் யாகத்தில் பங்கேற்றனர். டாக்டர் பரமேஸ்வர் பவுத்த மதத்தை சேர்ந்தவராக இருந்து தீட்சை பெற்றுள்ளதால், இந்த யாகத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>