உத்தரபிரதேச அரசு கொண்டு வந்த லவ்ஜிகாத் தடை சட்டம் மாயாவதி கடும் எதிர்ப்பு

பரெய்லி: உத்தரப்பிரதேசத்தில் திருமணத்துக்கான கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடுக்க லவ்ஜிகாத் தடை சட்டமானது இரண்டு நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமண கட்டாய மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் பரெய்லி மாவட்டத்தில் உள்ள தியோரனியா காவல் நிலையத்தில் தனது மகளை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி வற்புறுத்துவதாக டிக்காராம் என்பவர்  வாலிபர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து உவைஸ் அகமது என்பவர்  மீது  புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணத்துக்கான கட்டாய மத மாற்ற சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யும்படி உத்தரப்பிரதேச அரசுக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது டிவிட்டர் பதிவில், “திருமணத்துக்கான கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டமானது அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஏனெனில் கட்டாயம் மற்றும் மோசடி மூலமாக மதமாற்றம் செய்யப்படுவது என்பது நாட்டில் எங்குமே ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே சட்டங்கள் இருக்கின்றன. எனவே புதிய சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

Related Stories:

>