எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு தவறானவர்களால் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்

வாரணாசி: பிரதமர் நரேந்திரமோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக வாரணாசி-பிரக்யாராஜ் இடையே 73 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை போக்குவரத்துக்கு திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. ஆனால் பல ஆண்டுகளாக தவறாக வழிநடத்தப்பட்டு வந்த அதே நபர்களால் விவசாயிகள் மீண்டும் தவறாக வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.

இதே நபர்கள் கடந்த காலங்களில் குறைந்தபட்ச ஆதார விலை, கடன்தள்ளுபடி, மானியம் என்ற பெயரில் விவசாயிகளுடன் தந்திரமாக விளையாடி வந்தனர். விவசாயிகள் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புரளிகள் மூலம் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். முந்தைய நடைமுறைகள் சிறந்தது என்றால் எதற்காக இந்த சட்டங்களை எதிர்க்க வேண்டும். இந்த சட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு திறந்தவெளி சந்தைப்படுத்துதல் உறுதி செய்யப்படும் என்கிற போது, உள்ளூர் மண்டிகள், குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவை நீக்கப்படும் என அர்த்தமில்லை. முந்தைய நடைமுறைகள் தொடரும். அதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் முனையம் அமைக்கும் திட்டத்தை பார்வையிட்டார். பின்னர் தேவ் தீபாவளி மகோட்சவ நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு, ‘‘முதலில் நாட்டின் நலனே எங்களுக்கு முக்கியம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்’’ என எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் குரு ரவிதாஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக சாரணாத் தொல்பொருள் காட்சியகத்தையும் பார்வையிட்ட அவர் , அங்கு நடந்த ஒளி, ஒலி நிகழ்ச்சியையும் கண்டு மகிழ்ந்தார்.

* கூட்டணியில் இருந்து விலகுவோம்: பாஜவுக்கு எச்சரிக்கை

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோண்மணி அகாலி தளம் கட்சி விலகியது. இந்நிலையில், மற்றொரு கட்சியும் பாஜவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தானில் பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்டிரிய லோக்தன்திரிக் கட்சி (ஆர்எல்பி) கட்சியின் தலைவர் பெனிவால் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘டெல்லியில் விவசாயிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், பாஜவுடன் கூட்டணி தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்’’ என கூறி உள்ளார்.

Related Stories:

>