எப்சி புதுப்பிக்க புதிய விதிமுறை நீக்காவிட்டால் லாரிகள் ஸ்டிரைக்: மாநில செயலாளர் பேட்டி

நாமக்கல்: லாரிகளுக்கு எப்சி புதுப்பிக்க புதிய விதிமுறைகளை நீக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். லாரிகளுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கும்போது வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்கவேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் போக்குவரத்து ஆணையர் தனது உத்தரவை திரும்ப பெறவில்லை.

இதையடுத்து, நேற்று தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்படி, நாமக்கல்லில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கதலைவருமான வாங்கிலி, ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கதலைவர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் நேற்று நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிசந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் மாநில செயலாளர் வாங்கிலி கூறியதாவது: போக்குவரத்து ஆணையரின் உத்தரவு லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் லாரிகளுக்கு எப்சி செய்யும் போது கூடுதல் செலவு ஏற்படுகிறது. தரச்சான்று பெற்ற நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் போது, குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் கருவிகளை மட்டும் வாங்கவேண்டும் என லாரி உரிமையாளர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்றார். இதேபோல், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க (சிம்டா) பொதுச்செயலாளர் சண்முகப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் வேககட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் இல்லை. லாரி உரிமையாளர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட வேண்டும். 3 புதிய விதிமுறைகளையும் திரும்ப பெறவேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories:

>