×

உலக எய்ட்ஸ் தினம் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை:  எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களிடையே எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்’ ஆகும்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளி விவரங்களின் படி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் சதவிகிதம் 2010-11ம் ஆண்டு 0.38 சதவிகிதத்திலிருந்து 2019ம் ஆண்டு 0.18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய 3161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், இளைப்பாறுதல் மையம் என்னும் திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த நிதியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழகத்தில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : World AIDS Day , World AIDS Day: Let's create a non-infectious state: Chief Minister Palanisamy
× RELATED தமிழகத்தில் முதன்முறையாக எச்ஐவி...