கோரிக்கை நிறைவேறும் வரை கலைய மாட்டோம் டெல்லியே இறுதி போராட்ட களம்: 5ம் நாள் தர்ணாவில் விவசாயிகள் அறிவிப்பு; நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடக்குமா?

புதுடெல்லி: ``வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இறுதி போருக்காகவே டெல்லி வந்துள்ளோம்,’’ என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புராரி மைதானதுக்கு சென்றால், அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ பேரணியை கடந்த வியாழனன்று தொடங்கினர்.

அவர்கள் டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் அரியானா மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதே போல், டெல்லிக்கு செல்லும் அனைத்து எல்லைகளிலும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 5ம் நாளாக போராட்டம் நேற்றும் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

டெல்லியின் அனைத்து எல்லையையும் முடக்குவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளதால், டெல்லி எல்லைப் பகுதிகளில் இரும்பு மற்றும் கான்கிரீட் தடுப்புகள் வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் டெல்லிக்குள் நுழைய முடியாமல் வெளிவட்ட சாலைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. டெல்லியின் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முகார்பா சவுக், ஜிகேடி சாலை, என்எச் 44  பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், போராட்டக் களத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் குர்னாம் சிங் சாதுனி அளித்த பேட்டியில், ``விவசாயிகளின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. எங்களுடைய கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கா விட்டால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது இதுவரை 31 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எங்களது கோரிக்கைகள்  நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இறுதி போருக்காகவே டெல்லி வந்துள்ளோம்,’’ என்று கூறினார். விவசாயிகள் போராட்டம் நடத்த மத்திய அரசு புராரி மைதானத்தை ஒதுக்கியுள்ளது. அங்கு அவர்கள் வந்தால், டிச. 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிபந்தனையை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், மீண்டும் அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் நேற்று, ‘‘விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புராரி மைதானத்து செல்ல வேண்டும். அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது,’’ என்று கேட்டுக் கொண்டார். இதனால் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, சீக்கிய மத குரு குருநானக்கின் 551வது பிறந்தநாளை, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்ட களத்திலேயே நேற்று கொண்டாடினர். கான்கிரீட் தடுப்புகள் மீது விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். குருநானக் பிறந்தநாள் கொண்டாட்ட பிரசாதங்களை பாதுகாப்பு போலீசாருக்கும் வழங்கி பகிர்ந்து கொண்டனர்.

* விவசாயிகள் குரல் நாடெங்கும் எதிரொலிக்கும்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டரில், ``மோடி அரசு விவசாயிகளை துன்புறுத்துகிறது. விவசாயிகள் குரல் கொடுத்தால், நாடு முழுவதும் அது எதிரொலிக்கும் என்பதை அரசு மறந்துவிட்டது. நீங்களும் விவசாயிகள் சுரண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்புங்கள். உண்மைக்காக போராடும் உணவளிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவா? அல்லது பிரதமரின் முதலாளித்துவ நண்பர்களின் பக்கமா?’’ என்று கூறி விவசாயிகளுக்கான பேச்சு பிரசாரம் என்ற ஹேஷ்டேக்கை இணைத்து பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>