×

பாஜவை விட்டு போனவர் நிம்மதியாக வாழ்ந்ததில்லை: பதவி பறிபோன மாஜி துணை முதல்வர் விரக்தி

பாட்னா: பாஜவை விட்டு போனால் யாரம் நிம்மதியாக வாழமுடியாது என்று பதவி பறிக்கப்பட்ட முன்னாள் துணை முதல்வர் விரக்தியுடன் தெரிவித்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் 2017-2020ம் காலகட்டத்தில் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வராக இருந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை சுஷில் மோடிக்கு பதவி வழங்கப்படவில்லை.

ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இறந்த பின்னர், காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சுஷில் மோடியின் பெயரை பாஜக இறுதி  செய்துள்ளது. இவரது பெயர் அறிவிக்கும் முன் பல மூத்த தலைவர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்தன. பாஜகவின் ஷாஹனாவாஸ் உசேன், ஆர்.கே.சின்ஹாவின் மகன் ரிதுராஜின் பெயரும்  அடிபட்டது. இதற்கிடையே ராஷ்டிரிய ஜனதா தளமும் தனது வேட்பாளரை களம் இறக்குகிறது. ஆனால், இதுவரை  எந்த பெயர்களையும் அறிவிக்கவில்லை. கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங், மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திகி ஆகியோரின் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்புமனு தாக்கல் செய்தால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வுக்கு வாக்களிப்பு நடக்கும். இந்த நிலையில், பீகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘பாஜக ஒருவழிப் பாதை மாதிரி. பாஜகவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இங்கிருந்து யாரும் போக முடியாது. பாஜகவிலிருந்து வெளியேறியவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. நான் பீகார் அரசின் அங்கமாக இல்லாதபோதும், எனது ஆன்மா பீகார் அரசினுள்தான் இருக்கிறது. நமது கட்சியை நாம் வலுவிழக்க விடக் கூடாது’ என்றார்.

மீண்டும் துணை  முதல்வராக்கப்படாததால் சுஷில் மோடி குறித்து கடந்த 15 நாட்களுக்கு  மேலாக பீகார் அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

51 ஆண்டுக்கு பின் தேர்தல்
பீகார் சட்டசபையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருந்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராரும் முன்னாள் அமைச்சருமான விஜய் குமார் சின்ஹா (53) சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசி நிமிடத்தில் ஐக்கிய ஜனதா தளம் கொறடா உத்தரவை பிறப்பித்ததை தொடர்ந்து, இது சாத்தியமானது. பாஜக ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தது. கடந்த 51 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1969ம் ஆண்டுக்கு பிறகு சபாநாயகர் போட்டிக்கு மத்தியில் தேர்வு செய்யப்பட்டார். சின்ஹாவுக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 114 வாக்குகளும் கிடைத்தன.

சபாநாயகர் தேர்வு முடிந்தவுடன் தேஜஷ்வி யாதவ் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கொல்லப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தலிலும், சபாநாயகர் தேர்தலிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. நிதீஷ்குமார் சட்டப்பேரவை உறுப்பினர், ஆனால் அவரே சட்டமன்றம் அல்ல. இரண்டு அமைச்சர்கள் அவையில் இல்லை. அவர்களின் உதவியாளர்கள் போலி எம்எல்ஏக்களாக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தி உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : deputy chief minister ,BJP , The person who left BJP never lived in peace: the frustrated former deputy chief minister is frustrated
× RELATED நவராத்திரியின்போது மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவ்: பாஜவினர் கண்டனம்